ஐஜிபி: சமய விவகாரங்களைக் கேலி செய்ய வேண்டாம்

1igpசமய விவகாரங்களை அல்லது இன விவகாரங்களைக் கேலி செய்யக்கூடாது, அது ஆத்திரத்தை உண்டுபண்ணும் என்பதை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ் இஸ்மாயில் ஒமார் நினைவுறுத்தியுள்ளார்.

அதன் விளைவாக ஒற்றுமையும் இன இணக்கமும் பாதிப்புறும் என்பதால் அனைவரும் நாட்டின் சட்ட அமைப்பை மதித்து உயர் நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.

“நீண்ட காலமாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்திருக்கிறோம். இப்போது ஏன் சமயம் சம்பந்தப்பட்ட உணர்ச்சி வசப்பட வைக்கும் விவகாரங்களை எழுப்ப வேண்டும்?

“கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகான் லுவார் முனிசிபல் திடலில் மலாய்-மொழி பைபிளை எரிக்கத் திட்டம் போட்டிருந்ததாகக் கூறும் அறிக்கை ஒன்றை இன்று பெற்றோம்.

“பலரை விசாரணைக்காக அழைத்திருக்கிறோம்”, என்றாரவர்.  கோலாலம்பூரில் போலீசாரின் மாதாந்திர அணிவகுப்பு நிகழ்வில் கலந்துகொண்ட அவர், அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

பாதிரியார் ஒருவர், Pasukan Bertindak Anti Bible Bahasa Melayu (மலாய்மொழி பைபிள்-எதிர்ப்பு நடவடிக்கை படை) என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஒரு அமைப்பு அச்சடித்த சுற்றறிக்கை ஒன்றைக் கண்டெடுத்தாகவும் அதில் மலாய்மொழி பைபிளை எரிக்கும் ‘விழாவில்’ முஸ்லிம்கள் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்ததாகக் கூறி அதன் தொடர்பில் தாக்கல் செய்துள்ள அறிக்கை பற்றி இஸ்மாயில் கருத்துரைத்தார்.

அந்நிகழ்வில் பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த  கார்ப்பரல் ஆர்.சுப்ரமணியம், 52, கார்ப்பரல் நோர் அஸ்லான் அபு பக்கார்,41, ஆகிய இருவரும் சார்ஜண்டுகளாக பதவி உயர்வு பெற்றனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு கொள்ளையர் கும்பலை எதிர்த்துப் போராடிய அவர்களின் வீரத்தைப் பாராட்டி அந்தப் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அவர்களுக்கும் கொள்ளையர்களுக்குமிடையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் இருவருமே காயமுற்றனர்.

-பெர்னாமா