ஒரு வாக்காளரை அவருக்குத் தெரியாமல் பதிவு செய்வது சட்ட விரோதம் என தேர்தல் ஆணையம் (இசி) சொல்கிறது. அவ்வாறு பலர் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் வெளியானதைத் தொடர்ந்து அது கருத்துரைத்தது.
வாக்காளர் விண்ணப்ப பாரத்தில் விண்ணப்பதாரர் கையெழுத்திட்டிருப்பதோடு அடையாளக் கார்டின் பிரதியையும் இணைத்திருக்க வேண்டும் என இசி தலைவர் அப்துல் அஜிஸ் முகமட் யூசோப் கூறினார்.
தமது புதல்வி வாக்காளராகப் பதியவில்லை என்றும் ஆனால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறது என்றும் திருசெல்வம் வல்லிபுரம் என்ற ஒரு தந்தை புகார் செய்துள்ளது குறித்து அவர் கருத்துரைத்தார்.
சிலாங்கூர் பிஎன் தலைவர் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கையெழுத்திட்ட தீபாவளி வாழ்த்துக் கார்டு கிடைத்த போது தமது புதல்வி வாக்காளர் பட்டியலில் இருப்பதை திருச்செல்வம் அறிந்து கொண்டார்.
அந்தக் கடிதத்தில் அவருடைய 22 வயது புதல்வியின் வாக்களிப்பு மாவட்டம், தொகுதி போன்ற விவரங்கள் இடம் பெற்றிருந்தன.
“என் புதல்வி இந்தியாவில் படித்துக் கொண்டிருக்கிறார். 21 வயதாவதற்கு முன்னரே அவர் அங்கு சென்று விட்டார். அதனால் அவர் வாக்காளராகப் பதிந்து கொண்டிருக்க முடியாது.”
“என் புதல்வி பதிந்து கொண்டுள்ளாரா என்பதை அறிய நான் தேர்தல் ஆணைய இணையத் தளத்தில் பரிசோதனை செய்தேன்,”எனத் திருச்செல்வம் சொன்னார்.
சுபாங்ஜெயா சட்டமன்றத் தொகுதியிலும் கிளானாஜெயா நாடாளுமன்றத் தொகுதியிலும் வாக்காளிப்பதற்கு என் புதல்வி தகுதி பெற்றுள்ளதை நான் அறிந்தேன். அந்த இரு தொகுதிகளும் பக்காத்தான் ராக்யாட் வசமுள்ளது.
இசி: இது போன்ற புகார்கள் ஏற்கனவே வந்துள்ளன
பின்னர் தாம் அந்த விஷயம் குறித்து தமது புதல்வியிடம் விசாரித்ததாகவும் தாம் வாக்காளராகப் பதிந்து கொள்ளவில்லை என்பதை அவர் உறுதி செய்ததாகவும் திருச்செல்வம் தெரிவித்தார்.
திருச்செல்வம் தமது புதல்வியின் முழுப் பெயரையும் அடையாளக் கார்டு எண்ணையும் வழங்க வேண்டும் என அப்துல் அஜிஸ் கேட்டுக் கொண்டார். அதன் மூலம் இசி தனது பதிவுகளிலிருந்து அவரது விண்ணப்பப் பாரத்தைத் தேட முடியும் என்றார் அவர்.
“இது போன்ற புகார்கள் ஏற்கனவே வந்துள்ளன. ஆனால் அவை குறைந்த எண்ணிக்கையிலானவை. விண்ணப்ப பாரத்தைக் காட்டியதும் என்ன நடந்தது என்பதை அவர்கள் புரிந்து கொண்டனர்,” என அப்துல் அஜிஸ் மலேசியாகினிக்கு அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் அப்துல் அஜிஸ் அந்தச் சம்பவங்கள் பற்றி விவரிக்கவும் இல்லை. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதையும் தெரிவிக்கவில்லை.
“இசி முதலில் சோதனை செய்து உண்மை நிலவரத்தைக் கண்டறிவது நல்லது. உண்மையில் மோசடி நிகழ்ந்திருந்தால் போலீசில் புகார் செய்வது போன்ற அடுத்த நடவடிக்கைகளை எடுக்க முடியும்,” என்றார் அவர்.