ஹிண்ட்ராப்: தடை நீக்கப்பட்டது மீது சந்தோஷப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை

hindrafஹிண்ட்ராப் என்னும் இந்து உரிமை நடவடிக்கை முன்னணி மீது விதிக்கப்பட்டிருந்த நான்கு ஆண்டு காலத் தடை நீக்கப்பட்டுள்ளது, கொண்டாடுவதற்கு எந்தக் காரணத்தையும் தரவில்லை. ஏனெனில் மலேசியாவின் இனவாதக் கொள்கைகள் நீடிக்கின்றன என அந்த அமைப்பை தோற்றுவித்த உறுப்பினரான பி உதயகுமார் கூறுகிறார்.

13வது பொதுத் தேர்தல் நெருங்குவதால் எடுக்கப்பட்ட அரசியல் மாயாஜாலம் என அவர் தொடர்பு கொள்ளப்பட்ட போது கூறினார்.

கடந்த சனிக் கிழமை தைப்பூசத்துக்கு முதல் நாள் அரசாங்கம் அந்தத் தடையை நீக்கியது. ஆனால் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி அந்த இயக்கம் முன் வைத்த 18 கோரிக்கைகளை அரசாங்கம் இன்னும் நிறைவேற்றவில்லை என்பதை உதயகுமார் சுட்டிக் காட்டினார். அத்துடன் இன்னும் பெரும்பான்மை இந்தியர்கள் இன்னும் வறுமைப் பிடியில் சிக்கியுள்ளனர்.

தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள தேசத் துரோகக் குற்றச்சாட்டையும் மற்ற 54 ஹிண்ட்ராப் போராளிகள் மீது போடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களையும்  அரசு தரப்பு வழக்குரைஞர் இன்னும் கைவிடவில்லை என்றும் உதயகுமார் சொன்னார்.

வேலை வாய்ப்பு, கல்வி, வர்த்தக வாய்ப்புக்கள், சில நிபுணத்துவத் தொழில்களுக்கான நுழைவுத் தகுதிகள் ஆகியவற்றில் மலேசிய இந்தியர்கள் இன்னும் பாரபட்சம் காட்டப்படுவதாக அவர் தெரிவித்தார்.

“பல தமிழ்ப் பள்ளிகள் முழு அரசாங்க உதவி பெறும் பள்ளிகளாக இல்லாததால் அவை இன்னும் மோசமான நிலையில் உள்ளன. கொள்கலப் பெட்டிகளிலும் கடை வீடுகளிலும், பாழடைந்த கட்டிடங்களிலும் இன்னும் சில பள்ளிகள் இயங்குகின்றன.”

“அரசாங்கம் பெரிய திட்டங்களை, 500 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேற்பட்ட தொகையை ஒதுக்கீடாக அறிவிக்கிறது. அதில் எவ்வளவு தொகை தமிழ்ப் பள்ளிகளைச் சென்றடைகின்றது ?”hindraf1

“ஒரு சமயத்தில் அரசாங்கம் 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை அறிவித்தது. ஆனால் அந்தப் பணம் பள்ளிக்கூடங்களைப் போய்ச் சேரவே இல்லை. கட்டுமானச் செலவுகள் கூடி விட்டதே அதற்குக் காரணம் என கல்வி அமைச்சு தெரிவித்தது.”

அரசாங்கம் பெரிய பெரிய அறிவிப்புக்களை விடுப்பதற்குப் பதில் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி கடப்பாட்டை மெய்பிக்க வேண்டும்,” என உதயகுமார் வலியுறுத்தினார்.

வர்த்தக வாய்ப்புக்கள் வரம்புக்குள் இருப்பதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த சமூக மக்கள் வர்த்தக அனுமதிகளைப் பெறுவது மிகவும் சிரமமாக உள்ளது எனச் சொன்னார்.

லெம்பா பந்தாயில் ஈராயிரத்தாவது ஆண்டு தொடக்கம் பழைய உலோகப் பொருள் வணிகர் ஒருவருடைய வாகனத்தையும் எடை போடும் சாதனத்தையும் அவரிடம் அனுமதி இல்லாததால் அதிகாரிகள்  கைப்பற்றியதை அவர் குறிப்பிட்டார்.

“இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்னை இது தான்.அம்னோ வழி நடத்தும் அரசாங்கம் அவர்களை தொடர்ந்து ஒரங்கட்டி வருகின்றது,” என்றார் உதயகுமார்.

அதே நேரத்தில் சாலை ஒரங்களில் உணவுக் கடைகளை அமைக்கும் மலாய் வணிகர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் அவர் கூறிக் கொண்டார்.

இப்போது ஏன் பிஎன் -னை ஆதரிக்க வேண்டும் ?

உள்ளூர் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், சட்டத் துறை ஆகியவற்றில் சேருவது சமூகத்திற்கு அக்கறையுள்ள  இன்னொரு விஷயமாகும்.

சிஎல்பி என்ற சட்டத் தொழில் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் விஷயத்தை உதயகுமார் எடுத்துக் காட்டினார்.

அதில் மலேசிய இந்தியர்களுடைய தேர்ச்சி விகிதம் 10 விழுக்காடாக இருக்கின்றது. அதற்கு நேர்மாறாக மலாய்க்காரர்களுடைய தேர்ச்சி  விகிதம் அதிகமாக உள்ளது.

hindraf2மருத்துவம் பயில விரும்பும் இந்திய மாணவர்கள் அரசாங்கம் விதிக்கும் பல நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளதாக உதயகுமார் தெரிவித்தார்.

அந்தக் கட்டுப்பாடுகளினால்  முக்கியமான வாய்ப்புக்களிலிருந்து இளைஞர்கள் ஒதுக்கப்பட்டு விடுகின்றனர். பின்னர் அவர்கள் சமூக பிரச்னைகளுக்குள் தள்ளப்படுகின்றனர்.

தமது கருத்துக்கள் இனவாதத் தன்மையை கொண்டிருப்பதை ஒப்புக் கொண்ட அவர் அது தான் உண்மை நிலவரம் என்றார்.

தடை நீக்கப்பட்டுள்ளதால் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் பிஎன் -னுக்கு ஆதரவு அளிப்பார்களா என்ற  கேள்விக்குப் பதில் அளித்த உதயகுமார் அந்த நடவடிக்கை வெறும் அரசியல் மாயாஜாலம் என்றார்.

“இந்திய சமூகத்தினர் அந்த வலையில் விழுந்து விடக் கூடாது. கடுமையான பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் கடப்பாடு போன்ற நிலைகளை அவர்கள் கவனிக்க வேண்டும்.”

இந்திய சமூகம் அது குறித்து மகிழ்ச்சி அடைவதற்கு அரசாங்கம் எதனையும் இன்னும் நிறைவேற்றவில்லை. தடையை நீக்குவதால் அந்த சமூகம் எதிர்நோக்கும் பிரச்னைகள் தீரப் போவதில்லை,” என்றும் உதயகுமார் சொன்னார்.

“அவற்றுள் 480,000 நாடற்ற இந்தியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது அடங்கும். ஒரு சிலருக்கு  மட்டுமே குடியுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.”

 

TAGS: