பக்காத்தானில் சேர்வதற்கு பிஎஸ்எம் செய்த விண்ணப்பத்துக்கு இதுவரை ‘பதில் இல்லை’

1psmபார்டி சோசலிஸ் மலேசியா (பிஎஸ்எம்) பிஎன் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் குறிக்கோளில் பக்காத்தான் ரக்யாட்டில் சேர கடந்த ஆண்டு விண்ணப்பம் செய்தது. ஆனால், அதற்கு இதுவரை பதில் இல்லை.

கடந்த ஜூனில், அதன் முடிவை வாய்மொழியாக பக்காத்தானிடம் தெரிவித்த பின்னர் மூன்று மாதம் கழித்து முறையாக விண்ணப்பம் செய்து கொள்ளப்பட்டதாக பிஎஸ்எம் தலைமைச் செயலாளர் எஸ். அருள்செல்வம் கூறினார்.

1psm1“பக்காத்தானுக்குப் பக்கபலமாக பிஎன்னை எதிர்த்துப் போராடுவதே எங்களின் முந்தைய நிலைப்பாடாக இருந்தது. ஆனால், மக்கள் கேட்டுக்கொண்டதால் அவர்களுடன் இணைய முடிவு செய்தோம்”, என்றாரவர்.

ஆனால், விண்ணப்பத்துக்கு பக்காத்தான் இன்னமும் பதில் அளிக்கவில்லை என இன்று செய்தியாளர் கூட்டமொன்றில் அருள்செல்வன் தெரிவித்தார். அக்கூட்டத்தில் பிஎஸ்எம் அதன் தேர்தல் கொள்கை அறிக்கையையும் வெளியிட்டது.

கட்சித் தலைவர் நாசிர் ஹஷிம், துணைத் தலைவர் எம்.சரஸ்வதி, சுங்கை சிப்புட் எம்பி, எம். ஜெயகுமார் ஆகியோரும் அச்செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் தேர்தலில், பக்காத்தான் வேட்பாளர்களை ஆதரிப்பதாக பிஎஸ்எம் அதன் தேர்தல் கொள்கை அறிக்கையில் தெளிவாக அறிவித்துள்ளது.