முஹைடின் நாட்டு நிதி நிலைமையை அறியாதவர் என்கிறார் ஒரு எம்பி

muhaiசரவாக்கிற்கான எண்ணெய் உரிமப் பணம் 20 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டால் மலேசியா திவாலாகிவிடும் எனக் கூறும் துணைப் பிரதமர் முஹைடின் யாசின் நாட்டு  நிதி நிலைமையை அறியாதவர் என சரவாக் டிஏபி குற்றம் சாட்டியுள்ளது.

“உரிமப் பணம் 20 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டால் 2.2 பில்லியன் ரிங்கிட் கூடுதலாக கொடுக்க வேண்டியிருக்கும். அது மொத்த கூட்டரசு வருமானத்தில் ஒரே ஒரு விழுக்காடு,” என மாநில டிஏபி செயலாளர் சொங் சியங் ஜென் கூறுகிறார்.

அவர் பண்டார் கூச்சிங் எம்பி-யும் கோத்தா செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அண்மையில் கூச்சிங் சென்றிருந்த முஹைடின் விடுத்த இரண்டு அறிக்கைகள் பற்றி அவர் கருத்துரைத்தார்.

போதுமான நிதிகள் இருப்பதால் மலேசியா திவாலாகாது என்றும் பேறுகுறைந்த மலேசியர்களுக்கு பல வகையான உதவிகளை கொடுக்க முடியும் என்றும் பெரிய வளர்ச்சித் திட்டங்களை அமலாக்க முடியும் என்றும்  துணைப் பிரதமர் கூறியிருந்தார். கடந்த ஆண்டு 125 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை நாடு பெற்றுள்ளதே அதற்குக் காரணம் என்றார் அவர்.

அதே வேளையில் சரவாக்கிற்கு வழங்கப்படும் 5 விழுக்காடு எண்ணெய் உரிமப் பணம் 20 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டால் மலேசியா திவாலாகிவிடும் என அவர் இன்னொரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

“இரண்டு அறிக்கைகளும் ஒன்றுக்கு ஒன்று முரண்படுகின்றன. நமது மாநில ஆண்டு வரவு செலவுத் திட்டத்தப்  பார்த்தால் நமது வருமானத்திலிருந்து கிடைக்கும் 5 விழுக்காடு எண்ணெய் உரிமப் பணம் ஆண்டு ஒன்றுக்கு 785 மில்லியன் ரிங்கிட் ஆகும்.

‘ஒரு விழுக்காட்டை விடக் குறைவானது’

20 விழுக்காடாக அதிகரித்தால் கூடுதலாக 2.2 பில்லியன் ரிங்கிட் கிடைக்கும் எனக் கூறிய அவர், வருமான வரி மூலம் 110 பில்லியன் ரிங்கிட்டும் சுங்க வரி மூலம் 40 பில்லியன் ரிங்கிட்டும் மற்ற இதர வருமானங்களாக 20 பில்லியன் முதல் 30 பில்லியன் ரிங்கிட் வரை கிடைப்பதாகச் சொன்னார்.muhai1

“ஆண்டு ஒன்றுக்கு கூட்டரசு செலவுகள் 230 பில்லியன் ரிங்கிட் ஆகும். சரவாக்கிற்குக் கூடுதலாக 2.2 பில்லியன் ரிங்கிட் கொடுக்கப்பட்டால் அது மொத்த கூட்டரசுச் செலவுகளில் ஒரே ஒரு விழுக்காடு தான். அந்த அதிகரிப்பினால் கூட்டரசு அரசாங்கம் முழுமையாக திவாலாகி விடும் எனச் சென்னால் நாட்டு நிதி நிலைமை உறுதியாக இல்லை என்பது தான் அர்த்தம்.

“மலேசியாவின் நிதி நிலைமை ஏற்கனவே மிகவும் நலைவாகி உள்ளது.  முஹைடின் அறிக்கைகள்  முரண்படுகின்றன. அவருக்கு உண்மையில் எப்படிக் கணக்குப் போடுவது என்பதே தெரியவில்லை,” என்றும் சொங் தெரிவித்தார்.

“கூட்டரசு அரசாங்கத்தின் வருமானத்தையும் செலவையும் அறியாதவராக முஹைடின் இருப்பதையே அது உணர்த்துகின்றது.”

“பிஎன் தலைவர்கள் எப்போதும் புள்ளி விவரங்கள் இல்லாமல் பேசுகின்றனர். ஆனால் பக்காத்தான் தலைவர்கள் அப்படி அல்ல. எண்ணெய் உரிமப்பணத்தை 5 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் என நாங்கள் யோசனை சொல்லும் போது நாங்கள் சாத்தியமான பயனுள்ள புள்ளி விவரங்களைத் தருகிறோம்.”