பைபிள் எரிப்பு மருட்டல் மீது போலீசார் பெர்க்காசா தலைவர்களை விசாரித்தது

alkitab1‘அல்லாஹ்’ என்ற சொல்லைக் கொண்ட மலாய், ஜாவி பைபிள்களுக்கு எரியூட்ட ‘விழா’ ஒன்று ஏற்பாடு செய்யப்படுவதாகக் கூறப்பட்ட வதந்திகள் மீது பினாங்கு போலீசார் இரண்டு பெர்க்காசா தலைவர்களிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

பெர்க்காசா தலைவர் இப்ராஹிம் அலி, அதன் தகவல் பிரிவுத் தலைவர் ரோஸ்லான் காசிம் ஆகியோரே அந்த இருவர் ஆவர்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை பட்டர்வொர்த், பாகான் லூவாரில் அமைந்துள்ள பாடாங் பண்டரானில் ‘பைபிள் எரிப்பு’ கூட்டம் நிகழும் என்ற வதந்திகள் பரப்பப்பட்டதாக பினாங்கு போலீஸ் படைத் தலைவர் அப்துல் ரஹிம் ஹானாபி சொன்னார்.

நேற்று அந்த இரு பெர்க்காசா தலைவர்களிடமிருந்தும் போலீஸ் வாக்குமூலத்தைப் பதிவு செய்தது என்றும் புலனாய்வு அறிக்கை தயாராகி விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

“அந்த இரு தலைவர்களுடைய வாக்குமூலத்தை போலீசார் நேற்று பதிவு செய்தனர். அவர்கள் ஒத்துழைப்பு அளித்தார்கள். நாங்கள் புலனாய்வு அறிக்கையை தயார் செய்துள்ளோம். சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்துக்கு அது சமர்பிக்கப்படும்,” என அவர் ஜார்ஜ் டவுனில் பினாங்கு போலீஸ் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

திடல் ஒன்றில் மலாய் மொழி பைபிள்களுக்கு எரியூட்டும் ‘விழா’ ஒன்று நடத்தப்படும் என விளம்பரப்படுத்தும் அனாமதேய துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் செய்யப்படுவது மீது பாதிரியார் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை போலீசில் புகார் செய்திருந்தார்.

பொறுப்பற்ற சக்திகள் அந்த வதந்திகளைப் பரப்புவதால் பைபிள்களை எரிக்கும் கூட்டம் ஏதும் நிகழாது என போலீசார் உறுதி அளித்திருந்தனர்.

அந்த இரு பெர்க்காசா தலைவர்களுடன் போலீசார் தங்கள் விசாரணைகளுக்கு உதவுவதற்காக பல தனிநபர்களிடமிருந்தும் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதாகவும் அப்துல் ரஹிம் சொன்னார்.

பெர்னாமா