ஜனவரி 23ம் தேதி கொல்லப்பட்ட சி சுகுமார் என்ற பாதுகாவலருடைய குடும்பத்தினர், செர்டாங் மருத்துவமனையில் சுயேச்சையாக சவப் பரிசோதனை மேற்கொள்வதற்கு பிரபலமான தாய்லாந்து உடற்கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ரோஜானாசுனாந்த்-தின் சேவைகளை கோரியுள்ளனர்.
அதற்கு அங்கீகாரம் அளிக்குமாறு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், சுகாதார அமைச்சர் லியாவ் தியோங் லாய் , சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் ஆகியோருக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் என் சுரேந்திரன் இன்று விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“சுகுமார் மரணத்துக்கான உண்மையான காரணத்தை உறுதி செய்வதற்கு இரண்டாவது சவப் பரிசோதனையை நடத்துவதற்கான தங்கள் உரிமையை குடும்பத்தினர் பயன்படுத்துகின்றனர்,” என அவர் சொன்னார். அந்த பரிசோதனையை மேற்கொள்ளுமாறு அவர்கள் பொர்ன்திப்-பைக் கேட்டுக் கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
“அவரும் இரண்டாவது சவப் பரிசோதனையை மேற்கொள்வதற்குத் தயாராக இருப்பதாக எங்களிடம் கூறியுள்ளார்.”
ஷா அலாமில் அந்த நேரத்தில் இருந்த சிலாங்கூர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திலிருந்து “உயரத்திலிருந்து விழுந்ததால் ” மரணமடைந்த டிஏபி அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹாக் மீது பொர்ன்திப் இரண்டாவது சவப் பரிசோதனையை நடத்தினார்.