அன்வார்: கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் 20விழுக்காட்டைக் குறைத்தார் நஜிப்

1anwarகல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் பிரதமர் நஜிப் அப்துல் நசாக் 20 விழுக்காட்டைக் குறைத்து விட்டதாகக் குற்றம் சாட்டிய மாற்றரசுக் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம், இது கல்வியின் பங்களிப்புக்கு பிஎன் அரசாங்கம் குழி பறிப்பதைக் காண்பிக்கிறது என்றார்.

1anwar1யுனிவர்சிடி இண்டஸ்ட்ரி சிலாங்கூரில் இலவசக் கல்வி என்னும் தலைப்பில் முக்கிய உரையாற்றிய பெர்மாத்தாங் பாவ் எம்பியுமான அன்வார் (வலம்), தாம் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சருமாக இருந்தபோது கல்விக்கும் சுகாதாரத்துக்கும், அவை மக்களுக்கு நன்மை செய்யும் துறைகள் என்பதால், கூடுதல் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன என்றார்.

“ஒரு நாடு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20 விழுக்காட்டைக் கல்விக்கு ஒதுக்குவது சிறப்பானதாகும். ஆனால், மலேசியாவில், பிஎன் அரசாங்கம் கல்விக்கான ஒதுக்கீட்டைக் குறைத்திருக்கிறது.

“2012-இல் கல்வி அமைச்சுக்கு ரிம50 பில்லியன் ஒதுக்கப்பட்டது. 2013 பட்ஜெட்டில் அது ரிம 37(உண்மையில் 38.7பில்லியன்) பில்லியனாகக் குறைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு  அரசாங்கமும் கல்விக்கான ஒதுக்கீட்டைக் குறைத்ததில்லை”, என்றார்.

ஆளும் முறையிலும் நிர்வாக முறையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிய அன்வார், பல்கலைக்கழகம்வரை இலவசக் கல்வி வழங்குவதே பக்காத்தான் அரசின் நோக்கமாகும் என்றார்.

சிலாங்கூர், பினாங்கு அரசுகளை முன்மாதிரி அரசுகள் என்று குறிப்பிட்ட அவர், அவை அவற்றின் கையிருப்பு நிதியை முறையே ரிம2.5 பில்லியனாகவும் ரிம2 பில்லியனாகவும் அதிகரித்துக் கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார். மலேசியாவைப் பொருத்தவரை ரிம500பில்லியனுக்கும் அதிகமாக பற்றாக்குறை நிலவுவது வருத்தமளிக்கிறது என்றார்.

விரயங்களைத் தடுத்தல்

1anwar2பக்காத்தான் தேர்தலில் வெற்றிபெற்றால், இலவசக் கல்வி அளிக்கும் நோக்கத்துக்காக முதலில் பணம் வீண் விரயமாவதைத் தடுத்து நிறுத்தும்.

சுயேச்சை மின் உற்பத்தியாளர்கள் உதவித் தொகை பெற்று டீசல் வாங்கி அதைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தெனாகா நேசனல் பெர்ஹாட்டுக்குக் கூடுதல் விலையில் விற்கிறார்கள். அது பற்றி அவர்களுடன் பேச்சு நடத்தப்படும்.

“முடிவில், பயனீட்டாளர்களாகிய நாம்தான் மின்சாரத்துக்குக் கூடுதல் விலை கொடுக்க வேண்டியுள்ளது. இது சரியல்ல”.

பக்காத்தான் ஊழல்களையும் ஒழித்துக்கட்டும்

“நமது வளங்களைக் கொண்டே இலவசக் கல்வி அளிக்க முடியும். உயர்கல்விக் கடனுதவி நிதி(பிடிபிடிஎன்)யையும் எடுத்து விடலாம். 1997-இல் தனியார் உயர்கல்வி மையங்கள் பெருகியதால் அவற்றில் பயிலும் மாணவர்களுக்கு உதவத் தொடங்கப்பட்டதுதான் பிடிபிடிஎன்.

“அதை அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கு விரிவுபடுத்தும்  நோக்கம் இருந்ததில்லை. ஆனால், இப்போது பிஎன் அரசாங்கத்தில் அரசாங்கப் பல்கலைக்கழக மாணவர்களும் பிடிபிடிஎன் கடன் வாங்கித்தான் கல்வி பயில வேண்டிய நிலை உள்ளது”, என்றாரவர்.

துருக்கிய பிரதமரின் சவால்

அன்வார், சுங்கை பீசி சிறையிலிருந்து விடுதலை பெற்றதும் தாம் தம் துணைவியார் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலுடன் துருக்கிய பிரதமர் ரெசிப் தயிப் எர்டோகனைச் சந்தித்ததை நினைவு கூர்ந்தார். துருக்கி கிராமத்து மக்களுக்கு இலவசக் கல்வி கொடுக்க விரும்பி அதற்காக மிகவும் சிரமப்படுவதை ரெசிப் அன்வாரிடம் விவரித்தார்.

“அது அவருடைய இலட்சியம். ஆனால், பிஎன் அரசாங்கம் மக்கள் தரமான உயர்கல்வி பெறுவதற்குப் படும் இன்னல்களைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறது. நான் பிரதமராக வந்தால், துருக்கியைப் போல் இலவசக் கல்வி வழங்க முடியுமா என்றும் ரெசிப் சவால் விடுத்தார்.

1anwar3“மலேசியா அளவற்ற வளத்தைக் கொண்டிருக்கிறது. முறையான நிர்வாகமும் நல்லாட்சியும் இருந்தால் அதை (இலவசக் கல்வி) அடைய முடியும் என்றே நம்புகிறேன்”, என்று அன்வார் கூறினார்.

அது மட்டுமல்ல. பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச கணினிகள் வழங்குவது பற்றியும்  (பக்காத்தான்) ஆராய்வோம் என்றார்.

சிலாங்கூர் பக்காத்தான் அரசில்கூட இதைச் செய்யலாம் என்று அன்வார் குறிப்பிட்டார். அங்கு மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிமும் இருந்தார்.