கேகேபி ‘ஆவிகளுக்கு’ பிரதமரது சீனப் புத்தாண்டு கடிதங்கள் கிடைத்துள்ளன

lauகோலக் குபு பாரு சட்டமன்றத் தொகுதியில் பலருக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் சீனப் புத்தாண்டுக் கடிதங்கள் கிடைத்து வருகின்றன. அந்தக் கடிதம் அனுப்பப்பட்டவர்களில் சிலர் இருக்கின்றனரா இல்லையா என்ற கேள்வி கூட இப்போது எழுந்துள்ளது. காரணம் அவர்கள் யார் என்றே தெரியவில்லை. அதனால் வரும் பொதுத் தேர்தலில் அந்த தொகுதியில் மோசடி நிகழக் கூடும் என டிஏபி அச்சம் தெரிவித்துள்ளது.

2008ல் மிகவும் குறுகிய 448 வாக்குகளில் பிஎன் வெற்றி பெற்ற கோலக் குபு பாரு சட்டமன்றத் தொகுதியில் உள்ள சில வீட்டு உரிமையாளர்களுக்கு அவர்களுக்கு அறிமுகம் இல்லாத வாக்காளர்களுடைய விவரங்கள் அடங்கிய தனிப்பட்ட கடிதங்கள் கிடைத்துள்ளன.

பொறுப்பற்ற தரப்புக்கள் ‘ஆவி வாக்காளர்களை’ பதிவு செய்வதற்கு குறிப்பிட்ட சில முகவரிகளைப் பயன்படுத்தி வருவதாக சிலாங்கூர் மாநில டிஏபி அமைப்புச் செயலாளர் லாவ் வெங் சான் பெட்டாலிங் ஜெயாவில் நிருபர்களிடம் கூறினார்.

“நாங்கள் கடந்த மாதத்தில் மட்டும் அது போன்று 10 கடிதங்களைக் கண்டு பிடித்துள்ளோம்,” எனக் கூறிய லாவ் மேலும் தகவல் தெரிந்தவர்கள் அதனை வெளியிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மலாய் வாக்காளர்களுக்கான அந்தக் கடிதங்கள் தாமான் பெசாராவில் உள்ள சீனர் வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக லாவ் சொன்னார். அவர் அந்தக் கடிதங்களையும் காட்டினார்.

மூன்றாவது புகார்

அந்த வாக்காளர்கள் குறிப்பிட்ட முகவரியில் தங்கியிருந்ததே இல்லை என அவர் சொன்னார். உள்ளூர் சமூகத் தலைவர் ஒருவரிடம் அதனை உறுதி செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“அந்த வீடுகள் 1980ல் கட்டப்பட்டவை. அதில் சீனர் குடும்பங்களே தங்கியுள்ளன. மலாய் குடும்பம் ஏதும் அவற்றில் குடியிருந்ததே இல்லை.”

அந்த விவகாரத்துக்கு சிலாங்கூர் பிஎன் ஒருங்கிணைப்பாளர் முகமட் ஜின் முகமட் விளக்கமளிக்க வேண்டும் என புக்கிட் துங்கு சட்டமன்ற உறுப்பினருமான லாவ் கேட்டுக் கொண்டார்.

அது போன்ற சம்பவங்களை கண்டு பிடிக்க இன்னும் இரண்டு வாரத்திற்கு முயற்சிகள் செய்யப்படும் என்றும் அதற்குப் பின்னர் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்படும் என்றும் அவர் சொன்னார்.

அது போன்ற புகார்களை சுபாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் ஹன்னா இயோவும் ரவாங் சட்ட மன்ற உறுப்பினர் கான் பெய் நிய் -யும் கடந்த மாதம் வெளியிட்டிருந்தனர்.