மெராப் ஆய்வு: நூறு வயதை எட்டுகின்றவர்கள் புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்

merap160 மலேசியர்கள் தங்களது 90வது பிறந்த நாளுக்குப் பின்னர் புதிய வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மெராப் எனப்படும் மலேசிய வாக்காளர் பட்டியல் ஆய்வு திட்ட அமைப்பு நடத்திய ஆய்வின் வழி அது தெரிய வந்துள்ளது.

90 வயதுக்கும் மேற்பட்ட 160 பேர் கடந்த தேர்தலுக்குப் பின்னர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது. அவர்களில் நூறு வயதைத் தாண்டிய பலரும் உள்ளனர்.

2008 தேர்தலுக்கும் 2011 மூன்றாம் கால் பகுதிக்கும் இடையில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்கள் காணப்படுகின்றன.

“காலமான வாக்காளர்களைப் பட்டியலிலிருந்து அகற்றுவதற்கு இசி என்ற தேர்தல் ஆணையம் முயற்சி செய்த போதிலும் இன்னும் உயிரோடு இருக்கும் சாத்தியமில்லாத மக்களை தொடர்ந்து சில தரப்புக்கள் பதிவு செய்வதாகத் தோன்றுகிறது,” என மெராப் வலைப்பதிவில் கூறப்பட்டுள்ளது.

“தங்கள் நீண்ட கால வாழ்வில் முதன் முறையாக வாக்களிக்கும் 90 வயதுக்கும் 100 வயதுக்கு இடைப்பட்ட வாக்காளர்கள் பற்றி தேர்தல் முகவர்கள் விழிப்புடன் இருப்பது நல்லது,” என மெராப் அறிவுரை கூறியது.

மெராப்-பிற்கு UCSI பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றும் அரசியல் ஆய்வாளரான ஒங் கியான் மிங் தலைமை தாங்குகிறார். அவர் கடந்த ஆண்டு டிஏபி-யில் இணைந்தார்.

வாக்காளர் பட்டியலில் காணப்படுகின்ற குளறுபடிகளை கண்டுபிடித்து அவற்றை தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

2011 நான்காவது கால் பகுதிக்கும் 2012 இரண்டாவது கால் பகுதிக்கும் இடையில் பதிவு செய்யப்பட்ட புதிய வாக்காளர்கள் பற்றிய ஆய்வை மெராப் போதுமான மனித ஆற்றல் இல்லாததால் மேற்கொள்ள முடியவில்லை.

இசி அந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் அது வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் 90 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருந்தாலும் குடிமக்களாக உள்ள யாரும் புதிய வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதை தான் தடுக்க முடியாது என இசி அதில் தெரிவித்துள்ளது.

“வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்துவதற்கும் அது பொருந்தும்.”

“மிகவும் வயதாகி விட்டதால் எந்த வாக்காளரின் பெயரையும் இசி தன்மூப்பாக நீக்க முடியாது,” என அது தெரிவித்தது.

2012 மூன்றாவது கால் பகுதியில் 90 வயதுக்கும் 91 வயதுக்கும் இடைப்பட்ட நால்வர் வாக்காளராகப் பதிவு செய்து கொள்ள விண்ணப்பித்துள்ளதாகவும் இசி தகவல் வெளியிட்டது.