தமிழ்ப்பள்ளிகளுக்கான 2,000 ஏக்கர் நிலம்: சதித் திட்டமா?

-எம். குலசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர், பெப்ரவரி 5, 2013.

2008 தேர்தலுக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட மக்கள் கூட்டணி அரசு தமிழ்ப்பள்ளிகளைத் தவிர்த்து மற்ற பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு தலா 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை ஒதுக்கியிருந்தது. மீண்டும் ஆட்சியில் அமர்ந்த தேசிய முன்னணி அரசு முதல் பணியாக தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலத் திட்டத்திற்கு 2 ஆயிரம் ஏக்கர்  நிலத்தை ஒதுக்கித் தந்தது என்று பேரா மந்திரி புசார் ஜம்ரி கூறியதாக செய்தி வெளியாகி உள்ளது.

இந்த அசுர வேகத்தில் நிலத்தை ஒதுக்கியதாக கூறும் ஜம்ரி ஏன் அதே வேகத்தில் அதனை1batu kula மேம்படுத்தவும் தமிழ்ப்பள்ளிகளின் பெயரில் பதிவு செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர் நினைத்திருந்தால் அல்லது அவருக்கு இராஜ தந்திர ஆலோசனைகளைக் கூறும் மஇகாவினர், சமூக நலன் கருதி, உள்நோக்கமின்றி செயல் பட்டிருந்தால், இந்நேரம் அந்த நிலம் சீனர்களுக்கான நிலம் போன்றே பயிர்களைக் கொண்டிருக்கும்.

2008 இல் சீனர்கள் பெற்ற நிலம் 2010 ல் பயிர் செய்யப்பட்டது. அதே போல 2009 இல் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலம் இன்னும் அவற்றின் பெயரில் பதிவு செய்யப்படமலேயே நிலுவையில் இருக்கின்றது. இந்த நில ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டது உண்மைதான் என்று ஒப்புக்கொள்ளும் பேரா முதல்வர் அதனைக் களைவதற்கு வழி ஏதும் சொல்லவில்லையே ஏன்?

இன்னும் நிதானித்துத்தான் முடிவெடுக்கவேண்டும் என்றும் கூறும் அவர் மேலும் கால தாமதம் ஆவதற்கு வழி கோளுகின்றாறே அன்றி பிரச்சனையைத் தீர்ப்பதற்கு ஓர் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கவில்லை.
உண்மையில் தமிழ்ப்பள்ளிகளின் மேல் அக்கறையுள்ள முதலமைச்சர் என்றால் இந்த 4 ஆண்டுகளில் எப்பொழுதோ இதற்கானத் தீர்வை கண்டிருக்க முடியும். சீனப் பள்ளிகளுக்கு நிலம் பட்டா போட்டு கொடுக்க முடியும் என்றால், ஏன் தமிழ்ப் பள்ளிகளுக்கு இது முடியாமல் போகிறது? இதன் மர்மம் என்ன?
இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக நான் சந்தேகிக்கின்றேன். மஇகாவின் சில தரப்பினர் அந்த நிலத்தைக் கையகப்படுத்த ஜம்ரியை பகடைக் காயாக  பயன் படுத்த முயற்சிக்கின்றார்கள் என்று சந்தேகம் எழ வாய்ப்புள்ளது. இதன் பின்னனியில் ஏதேனும் சதி வேலைகள் நடக்கின்றனவா?
ஏதோ மூடு மந்திரம் போல் இருக்கின்றது! நிலத்தை மேம்படுத்துவது யாரவது இருக்கட்டும். முதலில் அந்த நிலம் யார் பேரில் பதிவு செய்யப்படப் போகின்றது என்று நாங்கள் கேட்ட கேள்விக்கு இன்னும் முதல்வர் நேரடியான பதிலை தரவில்லை.
மீண்டும் கேட்கின்றேன்:
1. இந்த நிலம் யார் பேரில் பதிவு செய்யப்பட இருக்கின்றது? அந்த நிலப் பட்டாவில் பேரா மாநிலத்திலுள்ள 134 தமிழ்ப் பள்ளிகள் விடுபட்டிருக்கும் என்றால் அதனை பேரா இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

2. இதற்கான காலக்கெடு என்ன? தேர்தலுக்கு முன்பா?  அல்லது பின்பா?

3. இதில் யோசிப்பதற்கு என்ன இருக்கின்றது?

4. தமிழ்ப்பள்ளிகளின் வாரியம் முறையாக அமைக்கப்பட்டிருந்தால் அதன் பேரில் பதிவு செய்யப்படும் என்ற  வீராவும், கணேசனும் கடந்த 4 வருடங்களாக சொல்லி வந்த வாக்குறுதி என்னவாயிற்று?

5. நிலம் யாயாசன் பேராவின் பெயரிலேயே இருக்கப்போகின்றதா?
இதற்கு பதில் ஆம் என்றால், பேரா அரசு, இந்தியர்களை ஏமாற்றிவிட்டது என்றுதான் அர்த்தம். தமிழ்ப்பள்ளிகளுக்குத்தான் நிலம் என்று சொன்ன அரசு அவற்றின் பெயரில் பதிவு செய்யாத வரையில் பாக்காத்தான் இந்த போரட்டத்தை கைவிடாது.
2008க்கு முன்பு பேரா அரசு கல்வி ஆட்சிக் குழுவின் உறுப்பினராக இருந்த ஜம்ரி தமிழ்ப்பள்ளிகளுக்காக தன் சுண்டு விரலைக் கூட அசைக்கவில்லை என்பதுதான் உண்மை. அப்பொழுது எழுந்த பங்கோர் தமிழ்ப்பள்ளி நில விவகாரத்தை தீர்த்து வைக்கக் வக்கில்லாத இவர் இப்பொழுது தமிழ்ப்பள்ளிகளுக்காக அங்கலாய்த்துக்கொள்வது எல்லாம் வரும் பொதுத்தேர்தலில் இந்தியர்களின் வாக்கை திசைத் திருப்பத்தான் என்பது தெரிந்த ஒன்று.
பாக்கத்தான் ஆட்சி மூலமே சிவநேசன் வழியாக பங்கோர் தமிழ்ப்பள்ளிக்கு நிலம் கிடைத்தது என்பது ஆவணப்படுத்தப்பட்ட உண்மை.

தமிழ்ப்பள்ளிகளின் வளர்சிக்காக பெற்றோர்களும் முன்னாள் மாணவர்களும், சமுதாயத்தின் முன்பு மழையிலும் வெயிலிலும் கையேந்தி நிதி திரட்டுவதுதான் இன்றளவும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
நீங்கள் செய்யும் தாமதங்கள் அனைத்தும் மக்கள் மனதில் அவநம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன என்பதை மட்டும் நினைவில் வையுங்கள்.

தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிற இந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலம் தமிழ்ப்பள்ளிகளின் பெயரில் பதிவு செய்யப்படாத வரையில் அந்நிலம் தமிழ்ப் பள்ளிகளுக்கு சொந்தமானது அல்ல என்பதனையும் நினைவுருத்த விரும்புகிறேன்.