பாஸ் கட்சி டிஏபி-யை அதிகம் சார்ந்திருப்பதாலும் அதனை நம்புவதாலும் எதிர்த்தரப்புக் கூட்டணியை விட்டு விலகும் துணிச்சல் அந்தக் கட்சிக்கு இல்லை என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் சொல்கிறார்.
அந்தக் கூட்டணியை விட்டு விலகினால் 13வது பொதுத்தேர்தலில் தனக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது என்றும் அதனால் தோல்வி காணுவோம் என்றும் பாஸ் கட்சி அஞ்சுகின்றது என்றார் அவர்.
“டிஏபி-யை நம்பியிருப்பதால் அதிலிருந்து விலகும் துணிச்சல் பாஸ் கட்சிக்கு இல்லை. அது வெளியேறினால் அது தோல்வி அடையும். ஆனால் அது நசாருதீனை (முன்னாள் பாஸ் துணைத் தலைவர் நசாருதின் மாட் ஈசா) வெளியேற்றியுள்ளது,” என அவர் சொன்னார்.
பாஸ் இஸ்லாமியக் கட்சியாக தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு அது தனது வலிமையைச் சார்ந்திருக்க வேண்டும் என நசாருதின் கூறியுள்ளது பற்றி மகாதீர் கருத்துரைத்தார்.
அவர் மலாயாப் பல்கலைக்கழகத்தில் நேற்று “அண்டார்டிக்கா: பனிக் கட்டிகளுக்கு மலேசியப் பயணம்” என்னும் தலைப்பைக் கொண்ட புத்தகம் வெளியிடப்பட்ட பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
சபாவில் குடியேற்றக்காரர்களுக்கு நீல நிற அடையாளக் கார்டுகள் வழங்கப்பட்டது பற்றியும் மகாதீர் கருத்துரைத்தார். நாட்டின் சட்டங்களுக்கு இணங்க அவர்களுக்கு அவை கொடுக்கப்பட்டதாக அவர் சொன்னார்.
பெர்னாமா