ஆங்கில மொழி நாளேடான நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் (என்எஸ்டி), தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே, அரசாங்கத்தின் நிலைத்தன்மையைச் சீர்குலைக்க முயலுவதாக குற்றம் சாட்டி வெளியிட்ட செய்தி தொடர்பில் பெர்சே அந்த நாளேடு மீது அவதூறு வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
“நாங்கள் அந்த செய்தியை மிகவுன் கவனமாக ஆய்வு செய்தோம். பெர்சே பற்றியும் அதன் நடவடிக்கைகள் பற்றியும் பல தவறான குற்றச்சாட்டுக்கள் அந்தச் செய்தியில் அடங்கியுள்ளதாக நாங்கள் கருதுகிறோம்,” என பெர்சே அமைப்பின் வழிகாட்டிக் குழு உறுப்பினரான அண்ட்ரூ கூ கூறினார்.
நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸில் கடந்த ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி முதல் பக்கத்தில் அந்தச் செய்தி வெளியானவுடன் அதனை மீட்டுக் கொண்டு மன்னிப்புக் கேட்கா விட்டால் அதன் மீது வழக்குத் தொடரப் போவதாக பெர்சே ஏற்கனவே மருட்டியிருந்தது.
அந்தச் செய்தியை மீட்டுக் கொள்ளுமாறு எழுத்துப்பூர்வமாக விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அந்த ஏடு நிறைவேற்றவில்லை என்றும் குற்றச்சாட்டுக்களுக்கு பெர்சே அளித்த பதிலை வெளியிடவில்லை என்றும் கூ அந்த வழக்கைச் சமர்பித்த பின்னர் நிருபர்களிடம் கூறினார்.
அதனால் “நிலைமையைச் சரி செய்வதற்கு” பெர்சே கூட்டணி சட்டப்பூர்வ வழிகளை பின்பற்ற வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.