மலாய் மொழி பைபிள்களில் இறைவன் என்ற சொல்லுக்கு மலாய் மொழி பெயர்ப்பாக ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவதைத் தற்காக்க வேண்டாம் என முஸ்லிம் அமைப்பு ஒன்று சமயங்களுக்கு இடையிலான ஆலோசனை மன்றத்தை எச்சரித்துள்ளது.
கூட்டரசு அரசமைப்புக்கு முரண்பாடாக இருக்கும் தங்கள் அறைகூவல்களினால் ஏற்படக்கூடிய சாத்தியமான விளைவுகள் பற்றி MCCBCHST என்னும் மலேசிய பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய, தாவோ ஆலோசனை மன்றம் சிந்திக்க வேண்டும் என Muafakat என அழைக்கப்படும் Pertubuhan Muafakat Sejahtera Masyarakat Malaysia-வின் தலைவர் இஸ்மாயில் மினா அகமட் கூறினார்.
“போலீஸ் புகார்கள், பொது சொற்பொழிவுகள், ஆர்ப்பாட்டங்கள், தகவல் கூட்டங்கள் ஆகியவற்றின் வழி வெளியாகும் முஸ்லிம் சமூகத்தின் எண்ணங்களைக் கருத்தில் கொண்டால் முஸ்லிம்களுடைய சினத்தை இனிமேலும் கட்டுப்படுத்த முடியாது. விரும்பத்தகாத சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்தால் அதற்கு MCCBCHST -அமைப்பே பொறுப்பேற்க வேண்டும்,” என அவர் இன்று விடுத்த அறிக்கை தெரிவித்தது.
அந்த மொழி பெயர்ப்பை தற்காத்ததுடன் அந்தச் சொல் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் மாய்ஸ் என்ற சிலாங்கூர் இஸ்லாமிய மன்றத்திடமும் முன்னாள் தலைமை நீதிபதி அகமட் பைருஸ் ஷேக் அப்துல் ஹலிம்-மிடமும் கேள்வி எழுப்பி நேற்று அறிக்கை விடுத்த MCCBCHST-ஐ அவர் கண்டித்தார்.
முஸ்லிம் அல்லாதவர் எப்படி தங்கள் சமயத்தை மற்ற முஸ்லிம் அல்லாதவர்களிடம் பரப்ப வேண்டும் எனக் கூறும் அத்தகைய தலையீடு ஒவ்வொரு சமய அமைப்பும் தனது சொந்த விவகாரங்களை நிர்வாகம் செய்து கொள்வதற்கு கூட்டரசு அரசமைப்பின் 11(3)வது பிரிவு வழங்கியுள்ள உரிமையை மீறுவதாக அமைந்துள்ளது என MCCBCHST வெளியிட்ட அறிக்கை கூறியிருந்தது.
அந்த விவகாரம் “அழிவைத் தரும் அரசியல் சதுரங்க ஆட்டம்” எனக் குறிப்பிட்ட இஸ்மாயில் MCCBCHST அதனைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
அந்த MCCBCHST அமைப்புடன் சமயங்களுக்கு இடையிலான ஒற்றுமை மேம்பாட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் அரசு சாரா அமைப்புக்கள் தங்கள் உறுப்பியத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஏனெனில் MCCBCHST “கௌரவமற்ற முறையில் நடந்து கொள்கிறது, அமைதியை ஏற்படுத்த உண்மையில் முயற்சி செய்யவில்லை,” என்றார் அவர்.