2012ம் ஆண்டுக்கான பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் முன்னாள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (இசா) கைதியான யாஸிட் சுபாட் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
புதிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படும் முதலாவது நபர் அவராக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது.
அவரையும் அவரது சக தொழிலாளியான முகமட் ஹில்மி ஹாசிமையும் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் உள்ள உணவு விடுதியில் இன்று பிற்பகல் மணி 12.30 வாக்கில் புக்கிட் அமான் கூட்டரசு போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த போலீஸ் குழு ஒன்று கைது செய்ததாக மனித உரிமைப் போராட்ட அமைப்பான சுவாராம் கூறியது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஊக்கமூட்டியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அதே சட்டத்தின் பிரிவு 4(1)ன் கீழ் யாஸிட் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரி தெரிவித்தார் என்றும் சுவாராம் குறிப்பிட்டது.
யாஸிட் 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டார். ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அவர் இப்போது அந்த உணவு விடுதியில் காப்பிக் கடை ஒன்றை நடத்தி வந்தார்.