அன்வாருடன் விவாத மேடை – 14.2.2013

anwaribrahimதேர்தலுக்குப் பிறகு மாற்றுக் கூட்டணி ஆட்சி அமைத்தால்  அரசியல் கொள்கைகள் எவ்வாறு அமையும் என்பதை எதிரணியின் தலைவர் அன்வார் இப்ராஹிம் விளக்கக் கோரும்  விவாத மேடையொன்றை  செம்பருத்தி.கொம் இணையத்தளம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்ச்சி வரும் 14.2.2013 வியாழக்கிழமை  மிட்லண்ஸ் தமிழ்ப்பள்ளி மாநாட்டு மையத்தில் மாலை மணி 7.30-க்கு நடைபெறும் என மலேசிய இந்திய சமூக இயக்க கூட்டமைப்பின் செயலாளர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.

இந்த விவாத மேடையில், முதன்மையான தமிழ் நாளிதழ்களின் ஆசிரியர்களும் சமூக இயக்கங்களின் பிரதிநிதிகளும் வினாக்களைத்  தொடுப்பார்கள். அவற்றிற்கு அன்வார் பதில் அளிப்பார்.

ஊடகங்கள் சமூக விழிப்புணர்ச்சிக்கு வித்திடும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவைதான் சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையே உண்டாகும் முரண்பாடுகளை வெளிக்கொணர்ந்து தீர்வை உண்டாக்க வழிவகுப்பவை. கட்டுப்பாடற்ற ஊடகம்தான் தனது தார்மீக பங்கை ஆற்ற இயலும். அவ்வகையில் 2007-ஆம் ஆண்டு முதல் நமது தமிழ் நாளிதழ்கள் ஆற்றி வரும் பங்கு இன்று அரசியல் முக்கியத்துவம் கொண்டதாக உள்ளது. எனவேதான் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதாக குணராஜ், கா. உதயசூரியன், எல்.சேகரன் மற்றும் கா.ஆறுமுகம் உள்ளிட்ட  ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.

மலேசிய இந்தியர்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலை மற்ற இனங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது. அவற்றை சீர்செய்ய அவ்வப்போது செய்யப்படும் நிதி ஒதுக்கீடும், அழும் பிள்ளைக்கு மிட்டாய் கொடுப்பது போல் அமையும் அரசாங்க உதவிகளும் பயன் அளிக்காது. எனவே மாற்று அரசாங்கம் அமையும் போது அது எவ்வகையில் கொள்கை மாற்றங்களைக் கொண்டு நம்மை தேசிய நீரோடையில் இணைக்கும் என்பதை அன்வார் தெளிவுபடுத்த இந்த நிகழ்வு உதவும் என்கிறார் இதன் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான வழக்கறிஞர் கா.ஆறுமுகம்.

இந்த நிகழ்வில் சிலாங்கூர் அரசாங்கத்தின் ஆட்சிக்குழு குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் மற்றும் இதர மக்கள் கூட்டணி பிரதிநிதிகளும் கலந்து கொள்வர்.

சுமார் மூவாயிரத்திற்கும்  அதிகமானோர்  கலந்து கொள்வர் என எதிர்பார்ப்பதாக கா. உதயசூரியன் கூறினார்.

தொடர்புக்கு : செம்பருத்தி – 03-26980622 / எல். சேகரன் – 016 2510752

midlands convention centre map