2012ம் ஆண்டுக்கான பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் (சொஸ்மா) கீழ் மூவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளது, கடந்த ஆண்டு பிலிப்பின்ஸில் மலேசியப் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் தொடர்புடையது என நம்பப்படுகின்றது.
போலீசார் தங்கள் வீட்டில் சோதனை செய்த போது பயங்கரவாதி எனக் கூறப்பட்ட முகமட் பிக்ரி அப்துல் காஹார் பற்றி இன்ஸ்பெக்டர் மணி என அடையாளம் கூறப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் தமது கணவரிடம் கேள்வி எழுப்பியதைத் தாம் செவிமடுத்ததாக தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி யாஸிட சுபாட்டின் மனைவி சோமெல் முகமட் கூறினார்.
“எனக்கு அந்த நபரைத் தெரியாது, உண்மையாக எனக்கு அவரைத் தெரியாது என அவர் பதில் அளித்தார்! அது சரியானது தான், உத்துசான் மலேசியாவில் பிக்ரி பற்றி இன்று காலை குறிப்பிடப்பட்டுள்ளது,” என சோமெல் சொன்னார்.
இன்று அம்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தமது கணவர் மீது குற்றம் சாட்டப்படுவதற்காகக் காத்திருந்த போது அவர் நிருபர்களிடம் பேசினார்.
யாஸிட்டும் கடந்த ஆறு மாதமாக அவரிடம் வேலை செய்த ஊழியரான ஹில்மி ஹபிமும் குடும்ப நண்பரான ஹலிமா ஹுசேனும் நேற்று கைது செய்யப்பட்டனர்.
இசா எனப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்துக்குப் பதில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் அமலாக்கப்பட்ட சொஸ்மா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்ட முதலாவது கைதிகள் அவர்கள் ஆவர்.
பயங்கரவாதம் தொடர்பான குற்றங்களைப் புரிந்த சந்தேகத்தின் பேரில் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தேசியப் போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் நேற்று தெரிவித்துள்ளார்.