பினாங்கு பிஎன் ஏற்பாடு செய்துள்ள திறந்த இல்ல உபசரிப்பில் தென் கொரிய இசைப் பாடகரான Psy உலகப் புகழ் பெற்ற தமது “ஒப்பா கங்ணம் பாணியில்” நடத்தும் நிகழ்வைக் காண கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் 30,000 க்கும் மேற்பட்ட மக்கள் கூடினர்.
ஹான் சியாங் கல்லூரித் திடலில் நடத்தப்படும் அந்த பிஎன் சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் அவர்களும் கலந்து கொண்டனர்.
எதிர்பார்க்கப்பட்ட 80,000 பேரைக் காட்டிலும் அந்த எண்ணிக்கை குறைவானது என்றாலும் அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் 50,000 பேர் கூடியிருக்கலாம் என மதிப்பிட்டார்.
அந்த அரங்கத்திற்குள் நஜிப் நுழைந்த போது “Psy-க்கு நீங்கள் தயாரா! “ஒப்பா காங்ணாம் பாணிக்கு நீங்கள் தயாரா ?” என அறிவிப்பாளர் பலத்த குரலில் வினவினார்.
அவர் பின்னர் பிரதமரையும் அவருடன் வந்த பிஎன் தலைவர்களையும் வரவேற்றார்.
பிரதமருக்கு உற்சாகமான வரவேற்பை வழங்குமாறு அறிவிப்பாளர் கேட்டுக் கொண்ட போதும் கூட்டத்தில் பெரும்பாலோர் அமைதியாக இருந்தனர். கொளுத்தும் வெயிலில் பலர் விசிறிக் கொண்டிருந்தனர்.
புத்ரி அம்னோ உறுப்பினர்களும் பிஎன் ஆதரவாளர்களும் ‘நான் பிரதமரை நேசிக்கிறேன்’ என்ற பதாதைகளை அசைப்பதைப் பார்க்க முடிந்தது. ஆனல் அவர்கள் எண்ணிக்கை சிறிதாக இருந்தது.
அந்த நிகழ்வுக்குத் தாம் 10 பஸ்களுக்கு ஏற்பாடு செய்ததாக நிபோங் தெபால் மஇகா தலைவர் ஆர் ராஜகோபால் கூறினார்.
அவர் ஏன் ‘நான் பிரதமரை நேசிக்கிறேன்’ எனக் கூவவில்லை என வினவப்பட்ட போது “அது பரவாயில்லை, நான் பல முறை அதனைச் செய்து விட்டேன்,” என அந்த 62 வயது ஓய்வூதியக்காரர் சொன்னார்.
பாரம்பரிய சீன சட்டைகளை அணிந்திருந்த நஜிப், ரோஸ்மா மான்சோருடன் அவர்களது பிள்ளைகளான அஷ்மான், நூர்யானா நாஜ்வாவும் வந்திருந்தனர். காலை மணி 10.48க்கு வந்தடைந்த அவர்களுக்கு சிங்க நடனத்துடனும் சிங்கே ஊர்வலத்துடனும் வரவேற்பு நல்கப்பட்டது.
அவர்களுடன் மாநில பிஎன் தலைவர்களான தெங் சாங் இயாவ், தெங் ஹோக் நான், சுற்றுப்பயண அமைச்சரான இங் யென் யென், முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி ஆகியோரும் வந்தனர்.
மஞ்சள், பச்சை, சிவப்பு
காலை மணி 9.30 வாக்கில் நிகழ்ச்சிகள் தொடங்கிய போது போக்குவரத்து சுமூகமாக இருந்தது. போக்குவரத்தையும் கூட்டத்தையும் கட்டுப்படுத்த பல இடங்களில் போலீசாரும் தொண்டர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர்.
கூட்டத்தில் பலர் மஞ்சள், பச்சை, சிவப்பு நிற உடைகளை அணிந்திருந்ததைப் பார்க்க முடிந்தது. சிவப்பு நிற உடையுடன் பல அம்னோ உறுப்பினர்களும் தென்பட்டனர். சிவப்பு நிறம் அம்னோ நிறமாகும்.
பெர்சே அமைப்பின் டி சட்டைகளை அணிந்தவர்களும் அங்கு காணப்பட்டனர்.
அந்த டி சட்டையை அணிந்திருந்தவர்களில் கிள்ளானைச் சேர்ந்த அலக்ஸ் தான் -னும் ஒருவர். தாம் Psy-யைக் காணவும் பக்காத்தானுக்கு ஆதரவு அளிக்கவும் வந்ததாக அவர் சொன்னார்.
“நான் ஐந்து பேருடன் காலை ஏழு மணிக்கே அங்கு வந்து விட்டேன்,” என்றார் அவர்.
இதற்கு முன்னர் பெர்சே-க்கு ஆதரவாக மஞ்சள் நிற, சுற்றுச்சூழலுக்கு ஆதரவாக பச்சை நிற, மாற்றத்துக்கு ஆதரவாக சிவப்பு நிற ஆடைகளை அணிந்து செல்லுமாறு பொது மக்களுக்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் ஆலோசனை கூறியிருந்தார்.
‘நான் பிரதமரை நேசிக்கிறேன்’ என்ற வில்லைகள் இல்லாத சிறப்பு அனுமதிகள் இல்லாததால் தொடக்கத்தில் பொது மக்கள் திடலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அந்த அனுமதிகளை எங்கு பெறுவது என்பது பலருக்குத் தெரியவில்லை.
பக்காத்தான் ராக்யாட் கூட்டணியின் சின்னம் எனக் கருதப்படும் ஹான் சியாங் திடலில் பிஎன் முதன் முறையாக சீனப் புத்தாண்டு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
2008 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக அங்கு டிஏபி தலைமையில் பக்காத்தான் கூட்டம் நடைபெற்றது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பக்காத்தானுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் பினாங்கில் அந்த எதிர்த்தரப்புக் கூட்டணி வெற்றி பெற்றது.
நஜிப்பும் அவரது குழுவினரும் வருவதற்கு முன்னதாக பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அவற்றுள் பாரம்பரிய நடனங்களும் சிங்க, பீனிக்ஸ் பறவை நடனமும் அடங்கும்.
ஒரே மலேசியாவை அறிமுகம் செய்த நஜிப் வழியாக உலகிலும் ஆசியாவிலும் தலை சிறந்த நிகழ்வை பிஎன் கொண்டு வந்துள்ளதாக தமது உரையில் மாநில பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் கூறினார்.
“நாங்கள் பினாங்கிற்கு தலை சிறந்ததைக் கொண்டு வர விரும்புகிறோம்,” என்றும் அவர் சொன்னார்.