1980-களிலும் 1990-ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலும் புரஜெக்ட் ஐசி-இன் சூத்திரதாரிகளில் இருந்த ஒருவர், அன்வார் இப்ராகிமுக்கும் முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவிக்கும் அத்திட்டத்தில் சம்பந்தம் இருந்ததில்லை என்கிறார்.
1980ஆம் ஆண்டுகளின் நடுப்பகுதியில், கோட்டா கினாபாலுவில் பேங்க் பெர்தானியன் நிர்வாகியாக இருந்த மாட் ஸ்வாதி அவி, புரஜெக்ட் ஐசியில் தாமும் உஸ்னோ கட்சியின் முன்னாள் தலைவர் டத்து முஸ்தபா ஹருனும் ஆற்றிய பங்கை இன்று ஹராகா டெய்லியிடம் நினைவு கூர்ந்தார்.
“அன்வார், புரஜெக்ட் ஐசியில் சம்பந்தப்படவில்லை. அவருக்கும் (மகாதிரின் வலக் கையான) காலஞ்சென்ற மெகாட் ஜூனிட் மெகாட் ஆயுப்புக்கும் (வலம்) அப்துல் அசீஸ் ஷம்சுதினுக்கும் ஆகாது என்பது அம்னோவில் உள்ள அனைவரும் அறிந்த விசயம்.
“மேலும், முஸ்தபாவும் அன்வார்மீது கோபம் கொண்டிருந்தார். அதனால் அவர் (அன்வார்) எப்படி அதில் ஈடுபட்டிருக்க முடியும்?.
“அப்துல்லாவைப் பொருத்தவரை இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடமாட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் அவர் சமய ஈடுபாடுள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்”, என்று மாட் ஸ்வாதி கூறினார்.
மாட் ஸ்வாதி (இடம்),சாபாவில் 1980-களில் பிபிஎஸ்ஸிடமிருந்து உஸ்னோவும் முஸ்தபாவும் ஆட்சியைக் கைப்பற்றுவதில் தமது பங்களிப்புப் பற்றியும் முஸ்தபாவின் உள்வட்டத்துக்குள் தாமும் ஒருவராக இருந்ததையும் ஹராகா டெய்லியிடம் விவரித்தார். நிறைய விசயம் தெரிந்தவராக இருந்தாலும், இப்போது நடக்கும் அரச ஆணைய விசாரணைக்கு அவர் ஒரு சாட்சியாக அழைக்கப்படவில்லை.
20,000 வாக்காளர்கள் புதிதாக பதிவுசெய்யப்பட்டு உஸ்னோ கவனம் செலுத்திய தொகுதிகளுக்குப் பிரித்து அனுப்பட்டதையும் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள முஸ்தபாவின் இல்லத்தில் மெகாட் ஜூனிட்டைச் சந்தித்தது பற்றியும் அவர் விவரித்தார்.
“நாங்கள் போலீஸ், இராணுவம் ஆகியவற்றுடனும் அணுக்கமாக இருந்தோம். தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த அப்துல் ரஷிட் அப்துல் ரஹ்மானுக்கும் நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்”, என்றாரவர்.
புரஜெக்ட் ஐசி தீவகற்பத்தில் தொடர்கிறது
சாபா கூட்டரசைவிட்டு விலகும் என்று பிபிஎஸ் எச்சரித்ததை அடுத்து அதை எவ்வகையிலும் கவிழ்ப்பதில் மகாதிர் உறுதியாக இருந்தார். அதற்காக உஸ்னோவை ஆதரித்தார்.
ஆனால், சாபாவுக்கு அம்னோ கொண்டுசெல்லத் திட்டமிட்ட மகாதிர், மாநில அம்னோ தொடர்புக்குழுவுக்கு உஸ்னோவின் துணைத் தலைவராக இருந்த சகாரான் டண்டாயைத் தலைவராக நியமனம் செய்ததுதான் வினையாக போயிற்று.
“சாபா அம்னோ தொடர்புக்குழுத் தலைவராக நியமிக்கப்படுவோம் என்று நம்பித்தான் மகாதிரின் ஆலோசனைப்படி உஸ்னோவைக் கலைத்தார் முஸ்தபா (இடம்).ஆனால், அவருக்குப் பதிலாக ஷாபி அப்டாலின் உறவினரான சகாரான் அங்கு அம்னோ தலைவராக நியமனம் செய்யப்பட்டார்”.
அது முஸ்தபாவுக்கு மிகப் பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அம்னோ தம் முதுகில் குத்தி விட்டதாகச் சொல்லி முஸ்தபா வருத்தப்பட்டதாக ஸ்வாதி கூறினார்.
புரஜெக்ட் ஐசி இப்போது தீவகற்பத்தில் தொடர்வதாக அவர் சொன்னார். ஜோகூரில், இந்தோனேசியர்களுக்கு குடியுரிமையும் நீலநிற அடையாள அட்டையும் கொடுக்கப்பட்டு அம்னோ-பிஎன் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
“(அவர்கள்) அம்னோ-பிஎன்னுக்கு வாக்களிக்கவில்லை என்றால், தேர்தல் ஆணையம் அதைக் கண்டுபிடித்து அவர்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள்.
“மலேசியக் குடிமக்களாக மாறியுள்ள இந்தோனேசியர்கள் அம்னோ அவர்களைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்ப்பதை உணர வேண்டும். வரும் தேர்தலில் அவர்கள் அம்னோவைப் புறந்தள்ள வேண்டும்”,என்று மாட் ஸ்வாதி கேட்டுக்கொண்டார்.