பஸ் நிறுவனங்கள்: “பின்கதவு தேசிய மயத்தால்” நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம்

Busஅரசாங்கத்துடன் தொடர்புடைய பஸ் நிறுவனங்களுக்குக் காட்டப்படும் சலுகையாலும் கடுமையான நடைமுறைகளினாலும் தனது உறுப்பினர்கள் பொதுப் போக்குவரத்துத் துறையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நசுக்கப்படுவதாக அகில மலேசிய பஸ் உரிமையாளர் சங்கம் கூறிக் கொண்டுள்ளது.

ஒரு காலத்தில் துடிப்புடன் இயங்கிய தனியார் பஸ் தொழில் துறை “பின்கதவு தேசிய மயத்தால்” கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என அது தெரிவித்தது.

பஸ் நிறுவனங்கள் இணைக்கப்படுவதற்கு வழி வகுத்த தவறான போக்குவரத்துக் கொள்கைகள் துடிப்புடன் இயங்கி வந்த தனியார் பஸ் சேவைத் தொழிலை கீழறுத்து விட்டது என அதன் தலைவர் முகமட் அஸ்பார் அலி ஒர் அறிக்கையில் தெரிவித்தார்.

தனியார் பஸ் சேவைத் தொழில் எதிர்நோக்கும் தடைகள்:

அரசாங்கத்துக்கும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் ( Prasarana/Rapid and Mara ) சாதகமான சூழ்நிலைகள் நிலவுவதால் சமநிலையற்ற ஆட்டக் களம்

பொருத்தமற்ற போக்குவரத்துக் கொள்கைகள் சலுகை பெற்ற நிறுவனங்களை உருவாக்கி விட்டன. அதனால் உற்பத்தித் திறனும் திறமையும் நசித்து விட்டன

தேசிய தரைப் போக்குவரத்து பெருந்திட்டத்தில் தனியார் துறை பஸ் நிறுவனங்கள் விடுபட்டுள்ளது

அடிக்கடி புகார் செய்யப்பட்டும் பல பிரச்னைகள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படவில்லை.

“ஆட்டக் களம் சம நிலையாக இல்லாததாலும் அரசாங்கப் பஸ் நிறுவனங்களின் ஊடுருவலினாலும் தன்மூப்பான விதிமுறைகளினாலும் தனியார் பஸ் நிறுவனங்களுக்கு பொருளாதார வலிமை குறைந்து விட்டது,” என முகமட் மேலும் கூறினார்.

கடுமையான நடப்பு சூழ்நிலையில் பொருளாதார ரீதியில் ஆதாயகரமாக இயங்க முடியாத தனியார் பஸ் நிறுவனங்கள் அந்தத் தொழிலிருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சங்கம் விரும்புகிறது.

‘மலாக்க வழிமுறை’ பரிந்துரை செய்யப்படுகின்றது

மலாக்கா மாநில அரசாங்கம் அண்மையில் எல்லா தனியார் பஸ் நிறுவனங்களையும் நடப்பு சந்தை மதிப்பில் கையகப்படுத்திக் கொண்டு வேலை நீக்க இழப்பீட்டையும் குறிப்பிட்ட தொகையையும் வழங்கிய நடவடிக்கையை அரசாங்கம் பின்பற்ற வேண்டும் என அவர் சொன்னார்.

“ரபிட், பஸ் தொழில் துறையைத் தேசிய மயமாக்கும் என்பது இப்போது தெளிவாகி விட்டதால் அந்தத் தொழிலிருந்து வெளியேற விரும்பும் தனியார் நிறுவனங்களுக்கு அரசாங்கம் இழப்பீடு வழங்குவதே நியாயமானதாகும்.” 

“தனியார் பஸ் நிறுவனங்களுக்கு இழப்பீடு கொடுக்கத் தவறுவது இழப்பீடு இல்லாத பின்கதவு தேசியமயமாகும். அதனை வேறு வகையாகச் சொன்னால் அப்பட்டமாக பறிக்கும் நடவடிக்கை ஆகும்,” என முகமட் அறிக்கை குறிப்பிட்டது.