சுகுமார் சடலத்தின் மீது இரண்டாவது சவப் பரிசோதனையை நடத்த விடுக்கப்பட்ட அழைப்பை தாய்லாந்து உடற்கூறு நிபுணர் டாக்டர் பொர்ன்திப் ரோஜாசுனாந்த் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டதால் புதியவரைத் தாங்கள் தேடிக் கொண்டிருப்பதாக சுகுமார் குடும்ப வழக்குரைஞர் என் சுரேந்திரன் கூறியிருக்கிறார்.
இன்று காலை மின் அஞ்சல் வழி பொர்ன்திப் தமது முடிவைத் தெரிவித்துள்ளதாக அவர் சொன்னார்.
இரண்டாவது சவப் பரிசோதனையை நடத்த பொர்ன்திப் ஒப்புக் கொண்டுள்ளதாக ஏற்கனவே சுரேந்திரனும் இன்னொரு வழக்குரைஞரான லத்தீப்பா கோயாவும் அறிவித்திருந்தனர்.
தாம் இப்போது அந்த விஷயத்தைக் குடும்பத்தாருடன் விவாதிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“இரண்டாவது சவப் பரிசோதனையை நடத்த நாங்கள் இன்னொரு உடற்கூறு நிபுணரைத் தேடிக் கொண்டிருக்கிறோம்,” சுரேந்திரன் மலேசியாகினியிடம் கூறினார்.
அரசாங்க மருத்துவமனை ஒன்றில் மட்டுமே சவப்பரிசோதனையை நடத்தலாம் என நடப்புச் சட்டம் சொல்வதாக அவர் தெரிவித்தார்.
ஆகவே இரண்டாவது சவப் பரிசோதனையை நடத்துவதற்கு தனியார் மருத்துவமனைகளைச் சேர்ந்த உள்நாட்டு உடற்கூறு நிபுணர்களைப் பெறுவதில் தாங்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக அவர் சொன்னார்.
என்றாலும் பகுதி தனியார் மருத்துவமனையான மலாயாப் பல்கலைக்கழக மருத்துவ மய்யத்தின் நிபுணர்களை அழைக்கும் சாத்தியத்தையும் தாங்கள் ஆய்வு செய்வதாகவும் சுரேந்திரன் குறிப்பிட்டார்.
போலீசார் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இரண்டாவது சவப் பரிசோதனையை நடத்த சுகுமார் குடும்ப உறுப்பினர்கள் உறுதி பூண்டுள்ளனர்.
“எது எப்படி இருந்தாலும் டாக்டர் பொர்ன்திப் அதனைச் செய்ய முடியாது போனாலும் சுகுமாருக்கு நியாயம் கிடைக்க நாங்கள் போராட்டத்தைத் தொடருவோம்,” என பிகேஆர் உதவித் தலைவருமான அவர் சொன்னார்.
40 வயதான சுகுமார், ஜனவரி 23ம் தேதி உலு லங்காட்டில் கைவிலங்கு மாட்டப்பட்டிருந்த நிலையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார். அவரது முகத்தில் மஞ்சள் தூள் காணப்பட்டது.
போலீசார் அவரது இறப்பைத் திடீர் மரணம் என போலீசார் வகைப்படுத்தியுள்ளனர். ஆனால் அது குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் கொலை என வகைப்படுத்தப்பட்டு புலனாய்வு செய்யப்பட வேண்டும் என சுகுமார் குடும்பத்தினர் வலியுறுத்துகின்றனர்.