கிளந்தானில் உள்ள பல இஸ்மாமிய என்ஜிஓ-கள், 13வது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சிக்கு வாக்களிப்பது “ஹராம்” (அனுமதிக்கப்படாத செயல்) என்று கூறியுள்ளன.
மிண்டா பொண்டோக், உஸ்தாஸ் மூடா மெம்பிலா அகாமா டான் தானா ஆயர் (உம்மதி), ஈக்காத்தான் செண்டிக்கியாவான் இஸ்லாம் கிளந்தான், பெண்டிடா ஆகிய என்ஜிஓ-கள் பாஸுக்கு எதிராக போராடுவதை ஜிஹாத் (புனிதப் போர்) என்கின்றன.
பாஸுக்கு வாக்களிப்பது இஸ்லாத்தை நிராகரித்து சமயச்சார்பின்மைக்காகப் போராடும் டிஏபி-யை ஆதரிப்பதற்கு ஒப்பாகும் என்றவை கூறின.
இதன் தொடர்பில் மலாய் ஆட்சியாளர்களிடம் மகஜர் வழங்கப்போவதாகவும் அதை தேசிய ஃபாட்வா மன்றத்துக்கும் அனுப்பி வைக்கப்போவதாகவும் அந்த என்ஜிஓ-கள் தெரிவித்ததாக உத்துசான் மலேசியா அறிவித்துள்ளது.
பாஸ் இஸ்லாத்தைக் காக்கத் தவறிவிட்டது, குறிப்பாக முஸ்லிம்-அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்த அது அனுமதித்தது மன்னிக்க முடியாத செயல் என்று மிண்டா பொண்டோக் ஆலோசகர் அப்துலா சா’அமா கூறினார்.
மற்ற சமயங்கள் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதை ஆதரிக்கிறார் என்பதால் மிண்டா பொண்ட்டோக் ஆதரவாளர்கள் அன்வார் இப்ராகிமையும் புறக்கணிப்பதாக அப்துல்லா குறிபீட்டார்.
மிண்டா பொண்டோக் செயல்குழு உறுப்பினர் முகம்மட் ஷியாம்சுல் முகம்மட் யூசுப் அல் ஹபிஸ், டிஏபி சொல்படி ஆடும் கருவிவியாக பாஸ் மாறியுள்ளது என்றார்.
பாஸுக்கு அம்னோதான் சரியான பங்காளியாக முடியும் என்று இன்னொரு என்ஜிஓ-வான முபாவாகாட் செஜாத்ரா மஷரகாட் (முபாவாகாட்) தலைவர் இஸ்மாயில் மினா அஹமட் கூறியதாகவும் அந்நாளேடு தெரிவித்திருந்தது.
பாஸ் அன்வார் இப்ராகிமுடன் சேர்ந்தது தப்பான முடிவு என்று இஸ்மாயில் குறிப்பிட்டார்.