2013 பிப்ரவரி 14 தேதி வெளியான மலேசியாகினியில் வெளியான டெரன்ஸ் நெட்டோ கட்டுரை பற்றி நான் கருத்துரைக்கிறேன்.
இந்த விளக்கத்தைத் தரும் போது நான் பிகேஆர்-கட்சியுடன் 2012 நவம்பர் முதல் தேதி நடத்தப்பட்ட உயர் நிலையிலான ரகசிய விவாதங்களையும் பக்காத்தான் உயர் நிலைத் தலைவர்களுடன் தொடரும் அடுத்தடுத்த கூட்டங்கள் பற்றியும் நான் குறிப்பிட விரும்புகிறேன்.
என்றாலும் அந்த ரகசிய விவாதங்கள் கசிய விடப்பட்டுள்ளது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஹிண்ட்ராப்புக்கும் பக்காத்தானுக்கும் இடையிலான சாத்தியமான ஒத்துழைப்பை முறியடிக்கும் பொருட்டு பொறுப்பற்ற சக்திகளுடைய தீய நோக்கம் அதற்குக் கராணம் என நாங்கள் நம்புகிறோம்.
மலேசியாவில் அரசியல், சமூக மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு எங்களுடைய பங்காக மஇகா வசமுள்ள எல்லாத் தொகுதிகளிலும் ஹிண்ட்ராப் போட்டியிடுவதற்கான யோசனையை நான் முன் வைத்தேன். அன்வார் இப்ராஹிமுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் முதன் முறையாக அந்த யோசனை தெரிவிக்கப்பட்டது.
ஏழ்மையில் உள்ள மலேசிய இந்தியர்களின் குரல் இது வரையில் நாடாளுமன்றத்தில் செவிமடுக்கப்படவில்லை என்பதால் அவர்களுடைய குரலாக இருக்கும் பொருட்டு வியூக பங்காளித்துவத்திற்காக அந்த வேண்டுகோள் விடுக்கப்படுகிறது என நாங்கள் அவரிடம் தெளிவுபடுத்தினோம். அந்த தேர்தல் உடன்பாடு மீது மேலும் பேச்சுக்களை நடத்துவதற்கு அப்போது இணக்கம் காணப்பட்டது.
கடந்த பொதுத் தேர்தலில் நிகழ்ந்த பல மாற்றங்களுக்கு ஹிண்ட்ராப் காரணமாகும்:
1. “நிலையான வைப்புத் தொகை” எனக் கருதப்பட்ட இந்தியர் வாக்குகள் திசை மாறி முழுமையாக எதிர்க்கட்சிகளுக்குச் செல்வதற்கு வழி வகுத்தது.
2. நாடாளுமன்றத்தில் பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்ததால் பிரதமர் ஒருவர் பதவி இழக்க நேரிட்டது,
3. நாடாளுமன்றத்தில் பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழப்பதற்கு வழி வகுத்தது
4. எதிர்க்கட்சி கூட்டணி ஐந்து மாநிலங்களில் வெற்றி பெற உதவி செய்தது
பல்வேறு தரப்புக்களுடன் விவாதம் நடத்திய பின்னர் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான யோசனை முன்மொழியப்பட்டது. நாங்கள் பிரதிநிதிக்கும் அடித்தட்டு இந்தியர்களுடைய கட்டளை எங்களுக்கு உள்ளது. சட்டமியற்றும் மன்றங்களில் அவர்களுடைய குரல் ஒலிக்க வேண்டும். இந்த நாட்டில் பல்வேறு கொள்கைகளை வகுக்கும் போது அவர்களுடைய நலன்களும் உரிமைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
வரும் தேர்தலில் மலேசிய வரலாற்றில் மிகவும் கடுமையான போட்டி நிலவும். அந்த வரலாற்றில் ஒரு பகுதியாக ஹிண்டராப் இருப்பதும் அவசியமாகும்.
ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளையும் 10 சட்டமன்றத் தொகுதிகளையும் முன்மொழிந்த போது நாங்கள் அது பேச்சுக்களுக்கு உட்பட்டது என்றும் பக்காத்தான் தலைவர்கள் வைத்துள்ள நடப்பு தொகுதிகள் எதனையும் நாங்கள் ஒரு போதும் கேட்கவில்லை என்றும் நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.
அந்த இடங்களுக்கான பேச்சுக்கள் ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை பக்காத்தான் ராக்யாட் அங்கீகரிக்கும் நிபந்தனைக்கு உட்பட்டது. பிப்ரவரி 6ம் தேதி பக்காத்தான் ராக்யாட் தலைமைத்துவத்துடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் இடங்கள் பற்றிய விவாதங்கள் இரண்டாம் நிலையே ( secondary ) என்றும் எங்களுடைய பெருந்திட்டத்தை பக்காத்தான் அங்கீகரிப்பதே எங்கள் முதலாவது இலட்சியம் என்றும் நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.
என்றாலும் பக்காத்தான் தலைமைத்துவம் கவலை கொண்டுள்ள அந்த பெருந்திட்ட வாசகத்தில், மொழியில் அல்லது எந்த விஷயத்திலும் திருத்தம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தை பக்காத்தான் அங்கீகரிக்குமானால் பக்காத்தானுக்கு பிரச்சாரம் செய்ய ஆயிரக்கணக்கான ஹிண்ட்ராப் தொண்டர்களைத் திரட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம் என 2013 பிப்ரவரி 9ம் தேதி நாங்கள் வெளிப்படையாகவே ஊடக அறிக்கைகள் மூலம் அறிவித்துள்ளோம்.
நாம் பொதுத் தேர்தலுக்கு முந்திய கடைசி 30 நாட்களில் இருக்க வேண்டும். எந்த நேரத்திலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்.
பக்காத்தான் விரைவாக முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் அடித்தட்டு இந்தியர்கள் ஒரு முடிவு செய்வதற்கு முன்னர் அதன் நிலையை அறிய விரும்புகின்றனர். நாடு முழுவதும் எங்கள் விளக்கக் கூட்டங்கள் தொடருகின்றன. ஹிண்ட்ராப் தலைவர்கள் வாரந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து வருகின்றனர்.
——————————————————————————–
பி வேதமூர்த்தி இந்து உரிமை நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) தலைவர் ஆவார்.