பக்காத்தான் ராக்யாட் கூட்டரசு அதிகாரத்தை எடுத்துக் கொண்டால் ஏழை இந்தியர்களுக்கான ஹிண்ட்ராப் பெருந்திட்டம் 100 நாட்களில் அமலாக்கப்படும் என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருப்பது ‘துல்லிதமான கால வரம்பு’ அல்ல எனப் பிகேஆர் சுபாங் எம்பி சிவராசா ராசைய்யா விளக்கியிருக்கிறார்.
வியாழன் இரவு ஷா அலாமில் 1500 பேர்-பெரும்பாலும் இந்தியர்கள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அன்வார் அவ்வாறு சொன்னதாக மலேசியாகினி நேற்று செய்தி வெளியிட்டது.
செம்பருத்தி செய்தி இணையத் தளம் ஏற்பாடு செய்திருந்த அந்த நிகழ்வில் தமிழ் நேசன், தினக் குரல், மக்கள் ஓசை, மலேசிய நண்பன் ஆகிய நான்கு நாளேடுகளும் பங்கு கொண்டன.
நாடற்ற மக்கள் பிரச்னையை 100 நாட்களில் தீர்ப்பதாக மட்டுமே அன்வார் உண்மையில் தெரிவித்தார் என அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிவராசா கூறினார்.
“நாடற்ற இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்கும் நடைமுறை துரிதப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் ஹிண்ட்ராப் பெருந்திட்டக் கோரிக்கைகளில் ஒன்று பற்றிக் குறிப்பிட்ட போது அன்வார் அவ்வாறு தெரிவித்தார்,” என சிவராசா விளக்கினார்.
“இந்த நாட்டில் நீண்ட காலமாக வாழும் நாடற்ற மக்கள் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்கே 100 நாள் காலவரம்பை அன்வார் தெரிவித்தார். அந்த நாடற்ற மக்களில் பெரும்பாலோர் இந்தியர்கள் ஆவர்,” என சிவராசா சொன்னார்.
“ஹிண்ட்ராப் பெருந்திட்டத்தில் காணப்படும் சில அம்சங்களை நீங்கள் பார்த்தால் அவற்றை அமலாக்குவதற்கு மத்திம காலம் முதல் நீண்ட காலம் வரையில் தேவைப்படுவது உங்களுக்குத் தெரியும். 100 நாட்களில் அந்தத் திட்டங்களை அமலாக்க முடியாது என்பது நிச்சயம். பிரச்னைகளைக் களையும் நோக்கம் கொண்ட கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு அந்த 100 நாட்கள் மிகவும் குறைவான காலமாகும்,” என்றார் அவர்.
‘100 நாட்கள் என்பது தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது’
நாடற்ற மக்கள் பிரச்னையை ஒரு மாதத்திற்குள் தாம் தீர்ப்பதாக அன்வார் அண்மையில் கூறியதை நினைவுபடுத்திய அந்த பிகேஆர் வழக்குரைஞர், என்றாலும் அந்தக் கால வரம்பை 100 நாட்களாக ஷா அலாம் கூட்டத்தில் அன்வார் நீட்டித்தாகச் சொன்னார். காரணம் அது “நாடற்றவர்கள் குடிமக்களாவதற்கு உண்மை நிலைக்கு ஏற்ற கால வரம்பு” எனச் சிவராசா குறிப்பிட்டார்.
“நாட்கள் என்பதை விட ஆண்டுகள் தேவைப்படும் ஹிண்ட்ராப் பெருந்திட்ட அம்சங்களுக்கு அந்த 100 நாள் அவகாசம் எனத் தவறுதலாக எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டது,” என்றும் அவர் சொன்னார்.
ஹிண்ட்ராப் போராட்டம் நடத்தும், அன்வார் வழி நடத்தும் எதிர்க்கட்சி கூட்டணி அனுதாபம் கொண்டுள்ள ஏழை இந்தியர்களுடைய சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் பக்காத்தான் ராக்யாட் தீவிர ஈடுபாடு காட்டுகின்றது என்பதையே கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த கேள்வி பதில் கூட்டத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அன்வார் அளித்த பதில்களின் முக்கிய நோக்கம் என்றும் சிவராசா குறிப்பிட்டார்.
“ஏழ்மையில் உள்ள மலேசியர்கள் எதிர்நோக்கும் அவலத்தை துடைப்பதற்கு பக்காத்தானில் உள்ள நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இந்த நாட்டு மக்கள் தொகையில் இந்தியர்களுடைய விகிதாச்சாரத்துடன் ஒப்பிடுகையில் ஏழை இந்தியர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகும்.”
“அந்த நிலை உண்மையில் துரதிர்ஷ்டமாகும். புக்கு ஜிங்காவில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அந்தப் பிரச்னைகளை தீர்ப்பதற்கு நாங்கள் அவசரமான அவசியத்துடன் செயல்படுவோம்,” என சிவராசா மேலும் கூறினார்.