மூன்று மத்திய அமைச்சர்கள் பேராக் மந்திரி புசார் ஜம்ரி அப்துல் காடிருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விடுத்திருப்பது வெளி மாநில அம்னோவில் ஏற்பட்டுள்ள பிளவை மூடிமறைக்கும் நாடகமாகும் என்று பேராக் பாஸ் தேர்தல் இயக்குனர் அஸ்முனி அல்வி கூறுகிறார்.
கடந்த சில மாதங்களாகவே, எதிர்வரும் தேர்தலில் அம்னோ உதவித் தலைவரும் தற்காப்பு அமைச்சருமான அஹ்மட் ஜாஹிட் ஹமிடியும் இரண்டாம் நிதி அமைச்சர் அஹ்மட் ஹுஸ்னி ஹணட்ஸ்லாவும் பேராக்கில் மாநிலச் சட்டமன்றத்துக்குப் போட்டியிடுவார்கள் என்ற பேச்சு அடிபடுவதாக அவர் சொன்னார்.
“மாற்றரசுக் கட்சியில் மட்டுமல்ல பிஎன்/அம்னோ வட்டாரங்களிலும் ஒவ்வொரு நாளும் அது பற்றிப் பேசப்படுகிறது.
“அஹ்மட் ஜாஹிட்டின் அறிக்கை அவ்விவகாரத்தை மூடிமறைக்கும் முயற்சிதான். ஜம்ரிக்கு எதிராக அதிருப்தி நிலவுகிறது. அவர் மாற்றப்படும் வாய்ப்பு உள்ளது”, என்று அஸ்முனி (இடம்) மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அஹ்மட் ஹுஸ்னி எந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்று வினவியதற்கு தம்புன் அம்னோ தொகுதித் தலைவரான இரண்டாம் நிதி அமைச்சர், உலு கிந்தாவில் போட்டியிடலாம் என்று ஊகிக்கப்படுவதாக அஸ்முனி கூறினார். அதே வேளை அஹ்மட் ஜஹிட் ஊத்தான் மெலிந்தாங்கில் களமிறங்கலாம்.
ஜம்ரி (வலம்) நாடாளுமன்றம் செல்வார் என்றும் அவரின் இடத்தில் அஹ்மட் ஹுஸ்னி அல்லது அஹ்மட் ஜாஹிட் மந்திரி புசாராக அமர்த்தப்படலாம் என்றும் வதந்திகள் பலமாகவே அடிபடுகின்றன.
ஜம்ரி, அஹ்மட் ஜாஹிட்டின் ஆள் என்று கருதப்படுகிறது. நான்காண்டுகளுக்குமுன் பேராக் அரசமைப்பு நெருக்கடியின்போது ஜம்ரி மந்திரி புசாராவதை அஹ்மட் ஜாஜிட் விரும்பினாராம். அதே வேளையில், அஹ்மட் ஹுஸ்னி பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஆளாகக் கருதப்படுகிறார்.
வியாழக்கிழமை பல நாளேடுகள், மூன்று அமைச்சர்கள் -அனைவருமே பேராக்கைச் சேர்ந்தவர்கள்- ஜம்ரியே பேராக் மந்திரி புசாராக நீடிப்பதை விரும்புகிறார்கள் என்று கூறும் அஹ்மட் ஜாஹிட்டின் அறிக்கையை வெளியிட்டிருந்தன. அஹ்மட் ஜாஹிட்டைத் தவிர்த்து மற்ற இருவர் அஹ்மட் ஹுஸ்னி, பிரதமர்துறை அமைச்சர் நஸ்ரி அப்துல் அசீஸ் ஆகியோராவர்.
‘பேராக் அம்னோ ஒற்றுமையாக உள்ளது’
இதனிடையே, லாருட் அம்னோ இளைஞர் தலைவர் முகம்மட் அன்வார் அரிப்பின், மாநில அம்னோவில் பிளவு என்று கூறப்படுவதை மறுத்தார். கட்சி ஒன்றுபட்டு ஜம்ரியை ஆதரிப்பதாகக் கூறினார்.
“ஜம்ரிக்கும் அஹ்மட் ஹுஸ்னிக்குமிடையில் கருத்துவேறுபாடு என்று மாற்றரசுக் கட்சி கூறுவதை நானும் கேட்டிருக்கிறேன். அது உண்மை அல்ல. இருவருக்குமிடையில் நல்லுறவு நிலவுகிறது”, என்று முகம்மட் அன்வார் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அஹ்மட் ஹுஸ்னி (இடம்) பேராக் அம்னோ துணைத் தலைவருமாவார். தலைவர், ஜம்ரி.
இருவருக்குமிடையில் பிளவு என்பது மாற்றரசுக் கட்சி கட்டிவிடும் கதையாகும் என்று முகம்மட் அன்வார் குறிப்பிட்டார்.
“அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் மூன்று அமைச்சர்களின் சார்பில் அஹ்மட் ஜாஹிட் அந்த அறிக்கையை வெளியிட்டிருந்தார்”, என்றார்.
ஜம்ரியின் உதவியாளர் ஒருவரும், ஜம்ரி மாற்றப்படுவார் என்பதை மறுத்தார். பேராக் மந்திரி புசார், கட்சித் தலைவர்களுடன் நல்லுறவை வைத்திருப்பதாக அவர் சொன்னார்.
2009-இல், பிஎன் ஏற்பாட்டின்படி நிகழ்த கட்சித்தாவலின் காரணமாக பக்காத்தான் அரசு கவிழ்ந்ததை அடுத்து ஜம்ரி மந்திரி புசாராக நியமிக்கப்பட்டார். அவர், ஓர் இடைக்கால மந்திரி புசார் என்பதே அரசியல் பார்வையாளர்கள் சிலரின் கருத்தாகும்.