பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் பாஸ் தலைவர்களான அப்துல் ஹாடி அவாங்கையும் நிக் அப்துல் அஜிஸையும் சிறுமைப்படுத்துவதைக் காட்டுவதாகக் கூறப்படும் காணொளி ‘நடவாத விஷயம்’ என பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் அதனை நிராகரித்துள்ளார்.
அவர் அந்த காணொளியை இன்னும் பார்க்கவில்லை என்றாலும் அது பற்றி வினவப்பட்ட போது மலேசியாகினியிடம் அவர் இவ்வாறு கூறினார்: “இஸ்லாத்தை நிக் அஜிஸ் புரிந்து கொள்ளவில்லை என அன்வார் சொல்வதாக அந்த காணொளி காட்டுகிறது என நீங்கள் என்னிடம் சொன்னால்-அது நடவாத விஷயம். அது ஜோடிக்கப்பட்ட அல்லது போலியான வீடியோவாக இருக்க வேண்டும்:
“நிக் அஜிஸைப் பற்றி அன்வார் பேசும் முறையை நான் அறிவேன். அவர் நிக் அஜிஸ் மீது மிகவும் உயர்ந்த மரியாதை வைத்துள்ளார். அன்வார் நிச்சயம் அது போன்று சொல்லியிருக்கவே முடியாது.”
அன்வார் அண்மையில் சபாவில் பேசியதாகக் கூறப்படும் அந்த ஒரு நிமிட காணொளி கடந்த வாரத்திலிருந்து பிஎன் ஆதரவு வலைப்பதிவுகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
அன்வார் அந்தப் பதிவில்,” நிக் அஜிஸ் இஸ்லாத்தைப் புரிந்து கொள்ளவில்லை. ஹாடி அவாங்கும் அப்படித் தான். அவர் அப்படியே பின்பற்றுகிறார்,” எனக் கூறுவதாக காட்டப்படுகிறது.
நிக் அஜிஸ் பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் ஆவார். ஹாடி அந்தக் கட்சியின் தலைவர் ஆவார்.
ஆனால் மலாய் மொழி பைபிள்களில் ‘இறைவன்’ என்ற சொல்லுக்கு மொழி பெயர்ப்பாக ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது மீது அந்த இரண்டு பாஸ் தலைவர்களையும் அம்னோ தாக்குவதை வருணிக்கும் போது மட்டும் அன்வார் அது போன்ற அறிக்கைகளை கடந்த காலத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவின் தொடக்கத்தில் அம்னோ பிரச்சாரம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதன் ஒலித் தரம் மோசமாக இருப்பதால் அன்வார் அதே விஷயம் தொடர்பில் பேசுகிறாரா என்பது தெரியவில்லை.