பிஎன் -னுக்கான ஆதரவைப் பெருக்கும் நோக்கத்துடன் இன்று நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் சர்ச்சைக்குரிய தாண்டா புத்ரா ( Tanda Putera ) திரைப்படம் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு சிறப்பாக திரையிடப்பட்டது.
அந்த பெல்டா கூட்ட நிகழ்ச்சி நிரலில் அந்தத் திரைப்படத்தை திரையிடும் நிகழ்வு இல்லை என்றாலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் வேண்டுகோள் விடுத்த பின்னர் நண்பகல் உணவுக்குப் பின்னர் அது காண்பிக்கப்பட்டது என பிரதமர் துறை துணை அமைச்சர் அகமட் மஸ்லான் கூறினார்.
“அந்தத் திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் காட்டப்படவில்லை. என்றாலும் வரலாற்று சிறப்புடைய அந்தத் திரைப்படம் மிகவும் முக்கியமானதாகும் என்று பிரதமர் என்னிடம் தெரிவித்தார். பெல்டா குடியேற்றக்காரர்களுக்கு அது திரையிடப்பட வேண்டும் எனப் பிரதமர் கேட்டுக் கொண்டார்.
“இது போன்று பெரிய எண்ணிக்கையில் கூட்டத்தை நான் எப்போது கூட்ட முடியும் ? நாம் நாளை வரை காத்திருந்தால் பொதுத் தேர்தல் வந்து விடக் கூடும்,” என கோலாலம்பூரில் புத்ரா உலக வாணிக வளாகத்தில் கூடியிருந்த மக்களிடம் அகமட் சொன்னார்.
1969 மே 13 இனக்கலவரங்களுக்குப் பின்னணியில் முன்னாள் பிரதமர் அப்துல் ரசாக் ஹுசேன், அவரது துணைப் பிரதமர் டாக்டர் இஸ்மாயில் அப்துல் ரஹ்மான் ஆகியோரது தொடர்புகளை அந்தத் திரைப்படம் வரிசைப்படுத்தியுள்ளது.