அதைத் தேசிய சேவை என்பீர்களோ அல்லது வியாபாரத் தந்திரம் என்று அழைப்பீர்களோ ஆனால், ஏர்ஏசியா X வெளிநாடுகளிலிருந்து வாக்களிப்பதற்காக நாடு திரும்பும் மலேசியர்களுக்குக் குறைந்த கட்டணப் பயணச் சேவையை வழங்க முன்வந்துள்ளது.
தேர்தல் எப்போது என்பது இன்னும் உறுதியாகவில்லை. ஆனால், வெளிநாடுகளில் உள்ள மலேசிய வாக்காளர்கள் நாடு திரும்ப கடைசிநேரத்தில் முன்பதிவு செய்தால்கூட அவர்களுக்குச் சலுகை கட்டணம் வழங்கப்படும் என்று ஏர்ஏசியா X அறிவித்துள்ளது.
இதை அதன் தலைமை செயல் அதிகாரி அஸ்ரான் ஒஸ்மான்-ரானியும் உறுதிப்படுத்தினார். ஆனால், அது பற்றி மேல்விவரம் எதுவும் தெரிவிக்கவில்லை.
“தேர்தல் தேதி தெரிந்ததும் அது பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றைச் செய்வோம்”, என்று அஸ்ரான் தெரிவித்தார்.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களுக்கு மட்டுமே சலுகைக் கட்டணம் என்பதைக் குறிப்பாக உணர்த்திய அஸ்ரான் சலுகைக் கட்டணத் தொகை இன்னும் முடிவுசெய்யப்படவில்லை என்றும் சொன்னார்.
வாக்களித்தல் என்பது பொதுமக்களின் முக்கிய கடமை என்பதால் ஏர்ஏசியாX இப்படியொரு திட்டத்தை அறிவித்ததாக அவர் சொன்னார்.
முன்பதிவு செய்வதற்கான வழிமுறை குறித்து ஏர்ஏசியா X குழு ஒன்று இன்னமும் ஆராய்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.