ஜோகூர் ஆலய விசேஷத்தின்போது பெர்சே, லைனாஸ்-எதிர்ப்பு டி-சட்டைகளுக்குத் தடை

1chingay

இவ்வாண்டு ஜோகூர் ‘சிங்கே’ ஊர்வலத்தில் கலந்துகொள்வோர் பெர்சே, லைனாஸ்-எதிர்ப்பு டி-சட்டை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறது. இந்த ஜோகூர் ‘சிங்கே’ ஊர்வலம் தேசிய கலாச்சார பாரம்பரிய நிகழ்வு என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தெய்வங்களின் வீதி உலா என்ற பெயரில் பிரபலமாக விளங்கும் இந்த ‘சிங்கே’ ஆண்டுதோறும் பிப்ரவரி 27-இல் நடைபெறுகிறது. ஜோகூர் பாரு பழைய சீன ஆலயம் அதற்கு ஏற்பாடு செய்கிறது.

1chingay1அந்த ஆலயம் நேற்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், ஊர்வலத்தில் கலந்துகொள்வோர்  பெர்சே, லைனாஸ்-எதிர்ப்பு டி- சட்டைகள் அணிய தடை விதிக்கப்பட்டிருப்பதை ஆலய நிர்வாகக் குழுத் தலைவர் லிம் காங் யோங் அறிவித்ததும் இணையப் பதிவர்கள் அதைக் கடுமையாகக் குறைகூறினர். ஜோகூர் சீன சமூகத்துக்கிடையிலும் அது பரவலாக விவாதிக்கப்பட்டது.

இதன் தொடர்பில் லிம்மைத் தொடர்புகொண்டு பேசியபோது, லிம் அந்தத் தடைவிதிப்பைத் தற்காத்துப் பேசினார். அப்படிப்பட்ட டி-சட்டைகளை அணிந்து யாரும் விழாக்கோலத்தைக் கெடுப்பதையோ  விளம்பரம் தேடிக்கொள்வதையோ அனுமதிக்க நிர்வாகக் குழு விரும்பவில்லை என்றாரவர்.

“சிங்கே குழுவுக்கான சட்டைகளைத் தவிர்த்து வேறு வகையான சட்டைகள் அணிந்திருந்தால் அவர்களை வெளியேறுமாறு கேட்டுக்கொள்வோம். மறுத்தால் போலீசின் உதவியை நாடுவோம்”, என்றார்.