சிந்தனைத் திறனின் திறவுகோல் தாய்மொழி

IMG-20130221-00267பெப்ரவரி 21, அனத்துலகத் தாய்மொழி தினம். யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட அத்தினம் உலகம் முழுவதும் 2000 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு அனைத்துலகத் தாய்மொழி தினம் மலாயா பல்கலைக்கழக மொழி மற்றும் மொழியியல் துறையின் அங்சானா லெக்சர் ஹாலில் கடந்த வியாழக்கிழமை இரவு 7.30 லிருந்து இரவு மணி 10.00 வரையில் பாடல்கள், இசை மற்றும் இந்திய, சீன மற்றும் மலாய் நடனங்களுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சுமார் 200 மாணவர்கள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியை தமிழ் அறவாரியம் மலேசியா, லிம் லியன் கியோக் பண்பாடு மற்றும் மேம்பாட்டு மையம், கோலாலம்பூர் மற்றும் சீன அசெம்பிளி ஹால் மற்றும் மலாயா பல்கலைக்கழக மொழி மற்றும் மொழியியல் துறை கூட்டாக நடத்தின. இந்நிகழ்ச்சி கெராக்கான் பெர்திண்டாக் மலேசியா என்றழைக்கப்படும் மலேசிய செயல் கூட்டமைப்பின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.

IMG-20130221-00268தாய்மொழிதான் சிந்திக்கும் திறனின் திறவுகோலாக இருக்கிறது என்று  தமிழ் அறவாறியத்தின் தலைவர் சி. பசுபதி   தாய்மொழியின் ஆற்றலையும் தாக்கத்தையும் வலியுறுத்தி தமது உரையில் கூறினார்.

எந்த மொழியைக் கற்றாலும், எத்தனை மொழிகளைக் கற்றாலும் ஒருவரின் சிந்தனை உருவெடுப்பது தாய்மொழியில்தான். ஆகவே, தாய்மொழி கல்வி மிக அவசியம் என்றாரவர்.

தாய்மொழி கல்வி கற்பதால் தொழில்துறை மற்றும் பொருளாதாரம் போன்றவற்றில் வெற்றி பெற முடியுமா என்ற கேள்வி தவறான கருத்தாகும் என்று கூறிய அவர், தாய்மொழி கல்வி வாழ்க்கையை செம்மைப்படுத்துகிறது என்று மேலும் கூறினார்.

தாய்மொழி கல்வி போதனையில் நாம் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியதுடன் அதன் மேம்பாட்டில் அக்கறை கொள்ள வேண்டும் என்று பசுபதி கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மொழி மற்றும் மொழியியல் துறையின் டாக்டர் பேட்டிரிசியா, டாக்டர் கே. கருணாகரன், எல்எல்ஜியின் தலைவர் டாக்டர் தோ கின் வூன், இக்ராம் அமைப்பின் தலைமைச் செயலாளர்  ஜைட் கமாருடின் மற்றும் ஜோஆசின் பிரதிநிதி ராமன் பாதுயின் ( சுக்கு கவும் செமாய்) மற்றும் சுவாராம் தலைவர் கா. ஆறுமுகம் ஆகியோரும் பங்கேற்றனர்.

தமிழ் அறவாரியம், ஜிபிஎம் மற்றும் இதர அமைப்புகளின் நிருவாகக் குழு உறுப்பினர்களும் பணியாளர்களும் இந்நிகிழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

புத்தகங்கள்தான் அரண்கள்

IMG-20130221-00270தாய்மொழி என்றால் என்ன, அது எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது என்பதைச் சுருக்கமாக விளக்கிக் கூறிய வருகை தரு பேராசிரியர் டாக்டர் கருணாகரன், யுனெஸ்கோ தாய்மொழி கல்வி வளர்ச்சிக்கும், பயன்பாட்டிற்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. அதற்குக் காராணம் தாய்மொழி கல்வி பல்லினப் பண்பாடு மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை உருவாக வழி வகுப்பதாகும் என்றாரவர்.

தாய்மொழி கல்வியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் புத்தகங்கள்தான் அடித்தளம் என்றாரவர்.

யுனெஸ்கோ தலைமை இயக்குனரின் கீழ்க்கண்ட சிறப்புச் செய்தியை அவர் வாசித்தார்:

“In this age of new technologies, books remain as precious instruments, easy to handle, study and practical for sharing knowledge, mutual understanding and opening of the world to all.

Books are the pillars of knowledge, societies and essential for promoting freedom of expression and education for all.”

தாய்மொழி கல்வி மற்றும் பண்பாடுகளின் மேம்பாட்டிற்கும் அனைத்துலக மக்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் புத்தகங்கள்தான் அடித்தளமாக அமைகின்றன.

IMG-20130221-00269தாய்மொழியில் புத்தகங்கள் இருக்க வேண்டும். அவற்றை படிக்க வேண்டும், பயன்படுத்த வேண்டும். இல்லையேல், இவ்வுலகிலுள்ள 6,000 மொழிகளில் 50 விழுக்காடு இந்நூற்றாண்டின் இறுதிக்குள் காணமல் போய் விடும் என்பதை டாக்டர் கருணாகரன் சுட்டிக் காட்டினார்.

புத்தகங்கள் வினியோகிக்கப்படுவதில் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். அதுவும் குழந்தைகளுக்கு அவர்களது மொழியில் புத்தகங்கள் கொடுப்பது மிக முக்கியமானதாகும்.

புத்தகங்கள் மொழி பெயற்பு செய்தல் இள வாசகர்களுக்கிடையில் பாலமாக அமைய உதவுகிறது என்றும் அவர் கூறினார்.

இவை அனைத்தும் “2015 வாக்கில் அனைவருக்கும் கல்வி” என்ற இலக்கை அடைய உதவும் என்றாரவர்.

“அம்மா” என்ற சொல் தாய்மொழியின் முதற்சொல். அதுவே கல்விக்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்று கூறிய இக்ராம் பொதுச் செயலாளர் ஜைட் கமாருடின், எதிர்வரும் காலத்தில் அனைத்து இன மக்களும் அனைத்துலகத் தாய்மொழி தினம் விழாவில் பெருமளவில் பங்கேற்று மக்களிடையே நல்லிணக்கம் மலர முன்வர வேண்டும் என்றார்.

“நாம் போராட வேண்டியுள்ளது”

IMG-20130221-00271தாய்மொழி தற்காக்கப்பட வேண்டும். உலகின் பல்வேறு அமைப்புகள் – ஐநா, யுனெஸ்கோ – தாய்மொழியில் கல்வி கற்பதற்கான உரிமையை வலியுறுத்தும் ஏகப்பட்ட தீர்மானங்களையும், ஒப்பந்தங்களையும் உருவாக்கியுள்ளன. மக்கள் தங்களுடைய சொந்த பண்பாடுகளைப் பின்பற்றுவது அவர்களது மனித உரிமையாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், நாம் இங்கு நமது அமைச்சுகளிடம் போராட வேண்டியுள்ளது என்று எல்எல்ஜியின் தலைவர் டாக்டர் தோ கின் வூன் அவரது உரையில் கூறினார்.

“அனைத்து நாடுகளிலும் தாய்மொழியில் கல்வி கற்கும் உரிமைகள் உண்டு என்பதில் சந்தேகமோ, கேள்வியோ இல்லை. ஆனால், நமது நாட்டில் நாம் போராட வேண்டியுள்ளது”, என்றார் டாக்டர் தோ.

“அந்த உரிமையை நீர்க்கவைக்க, சீரழிக்க முயற்சிக்கிறார்கள். மலேசிய பெரும் கல்வித் திட்டத்தில் மலாய் மொழிக்கு அதிக நேரம் ஒதுக்க முயற்சிக்கிறார்கள். அதில் பிரச்னை இல்லை. ஆனால், அது குறித்து அளிக்கப்பட கருத்துகளுக்கு துணைப் பிரதமரிடமிருந்து இன்னும் எந்தப் பதிலும் வரவில்லை”, என்பதை தோ சுட்டிக் காட்டினார்.

IMG-20130221-00272சரவா பூர்வீகக் குடிமக்களின் நிலங்கள் பறிக்கப்படுகிறது. பறிக்கப்படும் அந்நிலங்களுடன் அம்மக்களின் பல்லாயிரக்கணக்கான ஆண்டு பழமைவாய்ந்த அவர்களின் பாரம்பரியங்களும் பறிபோகின்றன.

“நாம் விழுப்புடன் இருக்க வேண்டும். இன்று நடைபெறும் இந்த விழா நம்மை என்றும் கவனத்துடன் இருக்க வழிகோலும் என்று நம்புகிறேன்”, என்றார் டாக்டர் தோ.

இந்நிகழ்ச்சியில் மனம் கவர்ந்த இந்திய, சீன, மலாய மற்றும் பூர்வீக மக்களின் நடனங்களும், பாடல்களும், இசைகளும் இருந்தபோதிலும், மூங்கில் குழல் மூலம் நாசி வழியாக ராமன் பாதுயின் வழங்கிய இன்னிசை அனைவரையும் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்திய என்றால் மிகையாகாது. டாக்டர் கருணாகரன் துள்ளி எழுந்து நாசியின் வழி இப்படி இசை வழங்கு அவரை அதிர வைத்து விட்டது என்று கூறிய அவர், ராமன் பாதுயினுக்கு தமது பாராட்டை தெரிவித்தார்.

“ஒரு நாள் போதுமா?”

IMG-20130221-00273தாய்மொழியின் உயர்வை, உண்ணதத்தைப் பேசுவதற்கு ஒரு நாள் போதுமா என்ற சவால் கேள்வி விடுத்து இந்நிகழ்ச்சியில் முடிவுரைத் துவங்கினார் தமிழ் அறவாரியத்தின் துணைத் தலைவர் சி.எம். திரவியம்.

அம்மா மொழி, பாட்டி மொழி இருக்கின்றன. அத்துடன் “வைப்பாட்டி” மொழியும் இருக்கிறது. இவற்றுக்கிடையிலான வித்தியாசங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறிய திரவியம் “தாய்மொழி எனது உள்ளத்தில் இருக்கிறது என்று கூறுவது வழக்கம். ஆனால், அது நமது குறுதியில் இருக்க வேண்டும்”, என்று வலியுறுத்தினார்.

இப்போதெல்லாம் பெரும்பாலானவர்கள் தாய்மொழியை தங்களுடைய வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துகின்றனர். அது குறித்து ஓரிரு உதாரணங்களைக் கூறிய அவர், இந்நிலை தொடர்ந்தால், யுனெஸ்கோ அளித்துள்ள தகவலின்படி இன்னும் 200 ஆண்டுகளில் இந்தியும் வங்காளமும்தான் மிஞ்சும் என்ற கட்டாயத்திற்குத் தள்ளப்படுவோம் என்று அவர் எச்சரித்தார்.

“தாய்மொழி வளர தினமும் உழைப்போம்” என்று கூறி அனைத்துலகத் தாய்மொழி தின விழாவை அவர் முடித்து வைத்தார்.