போலீஸ் 13வது பொதுத் தேர்தலுக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள நேற்றும் இன்றும் ‘Ex Ballot III’என்ற பெயரில் பயிற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறது.
நாடு முழுக்க மேற்கொள்ளப்படும் இப்பயிற்சி சாபாவில் மட்டும் மேற்கொள்ளப்படாது. அங்கு, இரண்டு வாரங்களுக்குமுன்பாக தாவாவுக்கு அருகில் கம்போங் டண்டுவோவுக்குள் ஊடுருவிய பிலிப்பினோ கும்பல் ஒன்றின்மீது போலீஸ் கவனம் செலுத்தி வருகிறது.
“பேராக்கில் எல்லா மாவட்டங்களிலும் இப்பயிற்சி மேற்கொள்ளப்படும்”, என்று போலீசின் முகநூல் பதிவு கூறுகிறது.
மற்ற மாநிலங்களைப் பொருத்தவரை, அந்தந்த மாநில போலீஸ் தலைமையகத்தில் பயிற்சி மேற்கொள்ளப்படும்.
பொதுத் தேர்தலின்போது இருக்கக்கூடிய நிலவரத்தை போலீஸ் படையினருக்கு உணர்த்தி நிலைமைக்குத் தக்கபடி செயல்பட அவர்களைத் தயார்படுத்துவதே பயிற்சியின் முக்கிய நோக்கமாகும்.
பேராக்கில் ஆங்காங்கே போலீசார் பெரிய எண்ணிக்கையில் கூடி நிற்பதைப் பார்த்து பொதுமக்கள் கலவரமடைய வேண்டாம் என அந்த முகநூல் பதிவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-பெர்னாமா