சிறீலங்கா அதிபர் ராஜபக்சே மலேசியாவில் நடத்தப்பட்ட ஓர் இஸ்லாமிய பொருளாதார ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு அழைக்கப்பட்டிருந்தார். அவரும் இதில் கலந்துகொள்வதற்கு ஆர்வத்துடன் இருந்தார்.
தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சே மலேசிய நாட்டில் காலடி வைக்க அனுமதிக்க மாட்டோம். அவர் இந்நாட்டிற்கு வருகை அளிப்பதற்கு மலேசிய அரசாங்கம் தடை விதிக்க வேண்டும் என்று வலுவான கோரிக்கைகளை இங்குள்ள தமிழர்கள் முன்வைத்தனர்.
மலேசிய தமிழர்கள் தெரிவித்த கடும் எதிர்ப்பின் பலனாக ராஜபக்சே இந்நாட்டிற்கு வருகை அளிப்பது தவிர்க்கப்பட்டது.
இரண்டு மில்லியனுக்கும் குறைவான மலேசிய தமிழர்கள் ராஜபக்சேயை மலேசியாவுக்குள் நுழையவிடாமல் தடுப்பதில் வெற்றி பெற்றனர்.
ஆனால், ராஜபக்சே இந்தியாவுக்கு அவர் விரும்பும்போதெல்லாம் வருகிறார், போகிறார். அந்நாட்டின் 7 கோடி தமிழர்கள் ஏன் ராஜபக்சேயின் இந்திய வருகையைத் தடுத்து நிறுத்தவில்லை?
நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற தமிழர் பணிப் படை பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றுவதற்காக வருகையளித்திருந்த தமிழ் நாடு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானிடம் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக செம்பருத்தி.கொம் இக்கேள்வியை எழுப்பியது.
ராஜபக்சேயை தடுத்து நிறுத்துவதற்கு அங்கு தலைவர்கள் இல்லை என்று சீமான் பதிலளித்தார்.
ஏழு கோடி மக்கள் சக்தி இருக்கிறதே. அவர்களைக் கொண்டு ஏன் இதனைச் சாதிக்கவில்லை என்ற கேள்விக்கு, “தமிழ் நாட்டில் தமிழர்கள் தலைவர்களாக இல்லை. ஆட்சியில் இருப்பவர்களும் போலீசாரும் தடைகள் பலவற்றை போடுகின்றனர். அவற்றையும் மீறி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்”, என்று சீமான் கூறினார்.
“தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் எழுச்சியின் விளைவாக அமெரிக்க முன்மொழியவிருக்கும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்துள்ளது”, என்று அவர் மேலும் கூறினார்.
“ஈழ விடுதலை, உலகத் தமிழர்களின் விடுதலை”
தமிழ் நாடு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தமது மலேசிய வருகையை ஒரு நினைவுப் பயணம் என்று வர்ணித்ததோடு இந்நாட்டை தமது இன்னொரு தாய் நாடு என்று நேற்று கோலாலம்பூர் சீன அசம்பெளி மண்டபத்தில் தமிழர் பணிப் படை பேரணியில் உரையாற்றிய போது கூறினார்.
ஆயிரத்திற்கு மேற்பட்டோர் அவரது உரையை செவிமடுத்தனர். அவர் அப்பேரணியில் உரையாற்றுவதற்கு முன்பு பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பி. இராமசாமியை தமிழர் தலைவராக அறிவிக்கும் பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.
ஐம்பதாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்டது தமிழ் தேசியம். தமிழ் ஈழமும் தமிழ் நாடும் இரு பெரிய தேசிய நிலங்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
கங்கை, கடாரம், காவேரி ஆண்ட தமிழனுக்கு ஏன் இந்த நிலை? சோழ கப்பலில் சென்று நாடு பிடித்தான். தமிழன் வாழாத நாடில்லை. ஆனால், அவனுக்கு ஒரு நாடு இல்லை என்பதைச் சுட்டிக் காட்டிய சீமான், “ஈழ விடுதலை, உலகத் தமிழர்களின் விடுதலை; உன், என் விடுதலை என்று அவர் முழக்கமிட்டார்.
தமிழர்களுக்கிடையில் இருக்க வேண்டிய ஒற்றுமையை வலியுறுத்திய அவர், “நாம் ஒன்றாக வேண்டும். அதற்காக தமிழ் நாட்டில் நாம் தமிழர் என்ற இயக்கத்தை நடத்தி வருகிறோம்.
“நாங்கள் போராடுகிறோம். அந்த நெருப்பு பற்றி எரிவதை இங்கும் காண்கிறோம்.
தமிழர்களிடம் தமிழர் என்ற உணர்வு இல்லை. சாதி என்ற வெறி இருக்கிறது. சாதிக் கட்சி இருக்கிறது. ஆனால், மொழி வெறியனாக, இன வெறியனாக இருக்கக்கூடாதா என்று அவர் வினவினார்.
“நான் இதர மொழிகளை நேசிக்கிறேன். அவ்வாறே எனது மொழியையும் நேசிக்கிறேன். தமிழை ஆங்கிலக் கலப்புடன் பேசுகிறோம். இராமசாமியை “Professor” என்றுதான் கூறுகிறார்கள். தமிழை ஆங்கிலக் கலப்பு இல்லாமல் பேசுவோம். நாம் பேசாவிட்டால் வேறு எந்த நாய் பேசும்” என்று சீமான் கேட்டார்.
தமிழ் இனம் இருப்பதா அல்லது சாவதா என்பதை முடிவு செய்ய வேண்டிய காலக்கட்டம் இது. இதனை உறுதி செய்வதற்கான ஒரே வழி – அரசியல் விடுதலை. இரத்தம் சிந்தாத போர். இதற்கு நாம் தயாராக வேண்டும் என்று சீமான் அறைகூவல் விடுத்தார்.
“தனி மனிதன் பேச்சு எடுபடாது. உலகத் தமிழர் ஒன்றுபட்டால் எடுபடும். இராமசாமியின் கரத்திற்கு நீங்கள் வலு சேர்க்க வேண்டும்”, என்று அவர் கேட்டுக்கொண்டார்.