தனிப்பட்ட துப்பறிவாளர் பாலா திரும்பினார்

Balaகொலையுண்ட மங்கோலிய மாது அல்தான்துயாவுடன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கைத் தொடர்புபடுத்தி தாம் 2008 ஜுலை மாதம் வெளியிட்ட முதலாவது சத்தியப் பிரமாணமே உண்மையானது என தனிப்பட்ட துப்பறிவாளர் பி பாலசுப்ரமணியம் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

நேற்று மாலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் வந்தடைந்தவுடன் நிருபர்களிடம் பேசிய அவர் அவ்வாறு கூறினார்.

இந்து வேத நூலான பகவத் கீதையை கையில் வைத்திருந்த பாலசுப்ரமணியம் அந்த முதலாவது சத்தியப் பிரமாணத்தை மறுக்கும் சத்தியப் பிரமாணம் உண்மையல்ல என்றும் கண்ணீர் மல்க சொன்னார்.

“முதலாவது சத்தியப் பிரமாணம் தான் உண்மையானதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என நான் சத்தியம் செய்கிறேன். இரண்டாவது சத்தியப் பிரமாணம் உண்மை இல்லை என நான் உங்களிடம் வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன்,” என்றார் அவர்.

அல்தான்துயாவின் இறுதி நாட்களில் பல பிரமுகர்களுடன் தாம் கொண்டிருந்ததாக  பாலசுப்ரமணியம் கூறிக் கொள்ளும் தொடர்புகள் பற்றிய விவரங்கள் அவரது முதலாவது சத்தியப் பிரமாணத்தில் இடம் பெற்றிருந்தன.

இதர பல விஷயங்களுடன் நஜிப், அல்தான்துயாவுக்கு அணுக்கமாக இருந்ததாகவும்  பாலசுப்ரமணியம் கூறிக் கொண்டார்.

அந்த சத்தியப் பிரமாணத்தை வெளியிட்டதற்கு ஒரு நாள் கழித்து அவர் அதனை மீட்டுக் கொண்டதுடன் இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை வெளியிட்டு தாம் முதலாவது சத்தியப் பிரமாணத்தை நெருக்குதலின் பேரில் வெளியிட்டதாகவும் சொல்லிக் கொண்டார்.

அதற்குப் பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.

தமது மனைவியையும் பிள்ளைகளையும் வெளிநாட்டில் விட்டு விட்டு தாம் மட்டும் தாயகம் திரும்பியுள்ள பாலசுப்ரமணியம் இனிமேல் பக்காத்தான் ராக்யாட்டுக்கு பிரச்சாரம் செய்வார்.

வரும் நாட்களில் அல்தான்துயா கொலை பற்றி மேலும் தகவல்களை வெளியிடப் போவதாகவும் அவர் சொன்னார்.

TAGS: