பக்காத்தான் ரக்யாட் ‘Manifesto Rakyat: Pakatan Harapan Rakyat’ (மக்கள் கொள்கை விளக்க அறிக்கை: பக்காத்தான் மக்களின் நம்பிக்கை) என்ற அதன் கொள்கைவிளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது. அது மற்றவற்றோடு மக்களின் நிதிச் சுமையைக் குறைப்பதாகச் சொல்லி வாக்காளர்களின் கவனத்தைக் கவர முனைகிறது.
இன்று, பக்காத்தான் மாநாட்டில் கொள்கை விளக்க அறிக்கையை முன்வைத்த பிகேஆர் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, நிறுவனங்கள் ஏகபோக உரிமை அனுபவிக்கும் நிலைக்கு முடிவு காணப்பட்டு வரி செலுத்தும் வருமான வரம்பு ரிம4,000 ஆக உயர்த்தப்படும் என்றார்.இப்போது அது ரிம2,500 ஆக உள்ளது. கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அது, அடுத்த நாளே பாகாங்கில் அமைந்த சர்ச்சைக்குரிய அரிய மண் சுத்திகரிப்பு ஆலையை எடுக்கும், ஜோகூரில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை மறுபரிசீலனை செய்யும், சரவாக் அணைக்கட்டுத் திட்டம், சுற்றுச்சூழல் சட்டங்கள் ஆகிவற்றையும் மறுபரிசீலனை செய்யும்.
“ஏகபோக உரிமைகளை ஒழிப்போம்… சுயேச்சை மின் தயாரிப்பாளர்களுடன் உள்ள ஒப்பந்தங்களைத் திருத்தி அமைக்கும் பேச்சுகளை நடத்துவோம். 1மலேசியா மேம்பாட்டுத் திட்டத்தையும் இரத்து செய்வோம். அது பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூருக்கு மட்டுமே பயன்படுகிறது”, என்று ரபிஸி கொள்கைவிளக்க அறிக்கையின் முதல் பகுதியைத் தாக்கல் செய்தபோது விளக்கினார்.
கொள்கைவிளக்க அறிக்கை, மக்கள் பொருளாதாரம், மக்கள் நலம், மக்கள் அரசு, மக்களின் அவாக்களை நிறைவேற்றுதல் என நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கிறது.