BR1M பாரோ மன்னர்களின் செயலைப் போன்றதல்ல : பாத்வா மன்றம்

1fadwaமத்திய அரசாங்கத்தின் 1மலேசியா மக்கள் உதவி (BR1M) எகிப்திய பாரோ மன்னர்களின் செயல்களைப் போன்றது என பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் கூறியுள்ளதை தேசிய பாத்வா மன்றம் மறுத்துள்ளது.

பிரிமின்வழி அரசாங்கம் பொதுமக்களுக்கான கடமையைத்தான் செய்கிறது என்றும் அதை இஸ்லாம் ஊக்குவிக்கிறது என்றும் மன்றத் தலைவர் அப்துல் ஷுக்குர் உசேன், ஆங்கிலமொழி நாளேடான நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.

“மேலும், அது வெளிப்படையாக கொடுக்கப்படுகிறது, சரியான ஆள்களுக்குத்தான் கொடுக்கப்படுகிறது. அச்செயலால் மக்களின் சுமை குறைக்கப்பட்டுள்ளது”, என்றவர் கூறினார்.

1fadwa1திங்கள்கிழமை ஷா ஆலமில் பக்காத்தான் ரக்யாட் மாநாட்டில் உரையாற்றிய அப்துல் ஹாடி, BR1M கொடுப்பது பாரோ மன்னர்களின் செயல்களுக்கு ஒப்பானது என்று கூறினார். மக்களை முட்டாள்களாக வைத்திருக்க அது கொடுக்கப்பட்டது என்றார்.

அப்துல் ஷுக்குர் (இடம்), ஏழ்மை நிலையில் உள்ளோருக்கு நிதிஉதவி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும் என்றார்.

“பண உதவி பெற்றவர்களைச் சில தரப்பினர் பழித்துரைத்திருப்பது சரியல்ல. வாழ்க்கையை நன்றாக வாழ அவர்களுக்கு அப்பணம் தேவை”,என்றவர் சொன்னார்.