Universiti Pertahanan Nasional என்னும் தேசியத் தற்காப்புப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளர் ரித்துவான் தீ அண்மையில் எழுதிய ஒரு கட்டுரை இந்திய சமூகத்தின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளதாகக் கூறிக் கொண்ட மஇகா இளைஞர் பிரிவு அவருக்கு ‘ஒரு பாடம்’ கற்பிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
சினார் ஹரியானில் கடந்த வாரம் வெளியான அந்தக் கட்டுரை தொடர்பில் ரித்துவானை கூட்டரசு அரசாங்கம் ‘தண்டிக்காமல்’ விடக் கூடாது என அந்தப் பிரிவின் தகவல் பிரிவுத் தலைவர் எஸ் சுப்ரமணியம் கூறினார்.
“மலிவாக விளம்பரம் தேடும் பொருட்டு இனப் பிரச்னைகளை வேண்டுமென்றே தூண்டுகின்றவர்களுக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும்,” என அவர் சொன்னார்.
உள்துறை அமைச்சிடம் இன்று காலை ஆட்சேபக் குறிப்பு ஒன்றை வழங்கிய பின்னர் சுப்ரமணியம் நிருபர்களிடம் பேசினார்.
அந்த அமைச்சின் பாதுகாப்பு, பொது ஒழுங்குப் பிரிவின் துணைத் தலைமைச் செயலாளர் ஷாம்ரில் பைசாலிஸ் சம்சுல் அந்த மனுவைப் பெற்றுக் கொண்டார்.
முஸ்லிமாக மாறிய சீனரான ரித்துவான் தீ-யின் கட்டுரை இனவாதத் தொனியைக் கொண்டிருந்ததாகக் கூறி பல போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
அந்தக் கட்டுரை மீது சினார் ஹரியான் ஏற்கனவே மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.