பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை மீது ஹிண்ட்ராப் ‘மிகுந்த ஏமாற்றம்’ தெரிவித்துள்ளது. அது மலேசிய இந்திய சமூகத்தின் நலன்களைப் புறக்கணித்து விட்டதாக அது கூறியது.
“எங்கள் ஏமாற்றம் ஆழமானது, கவலை அளிக்கிறது- அதற்கு அது சொல்லியிருப்பது காரணமல்ல, மாறாக அது சொல்லாமல் விட்டது தான்.”
“பக்காத்தான் தனது வாக்குறுதிகளில் இந்த நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் நலன்களையும் தேவைகளையும் முற்றாகப் புறக்கணித்துள்ளது. அந்த ஒர் அம்சத்தில் அது பல விஷயங்களைச் சொல்லி விட்டது,” என ஹிண்ட்ராப் தலைவர் பி வேதமூர்த்தி இன்று விடுத்த அறிக்கை குறிப்பிட்டது.
அது போன்ற புகார்களை பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் ஏற்கனவே நிராகரித்துள்ளார்.
பக்காத்தன் தேர்தல் கொள்கை அறிக்கை இன எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என அவர் சொன்னார்.
என்றாலும் அந்த கொள்கை அறிக்கையில் மலாய்க்காரர்கள், மலேசியச் சீனர்கள், ஒராங் அஸ்லி சமூகங்கள், ஆயுதப் படைகளின் முன்னாள் வீரர்கள், பெல்டா குடியேற்றக்காரர்கள் ஆகியோருக்கு சிறப்பாக வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுள்ளதை வேதமூர்த்தி சுட்டிக் காட்டினார்.
“அந்த அம்சங்கள் இனப் பிரிவுகளையும் துணைப் பிரிவுகளையும் கடந்து செல்வதாகத் தெரியவில்லை. இன அரசியலிலிருந்து பக்காத்தான் விலகிச் செல்வதாக போதுமான அளவுக்குச் சொல்லப்பட்டு விட்டது. ஆனால் அது கொள்கை என்பதை விட வெறும் அறிக்கையாகவே தோன்றுகிறது.”
“இந்திய ஏழை மக்களும் ஒதுக்கப்பட்டவர்களும் எதிர்நோக்கும் பிரச்னைகளை அலட்சியம் செய்வதற்கு அவர்கள் அந்தக் காரணத்தை அடிக்கடி பயன்படுத்தி வருகின்றனர்.”
ஒதுக்கப்பட்ட இந்தியர்களுடைய பிரச்னைகளை ‘நிரந்தரமாகவும் நடைமுறைக்க்கு ஏற்ற வகையிலும் முழுமையாகவும்’ தீர்ப்பதற்கு ஆண்டு ஒன்றுக்கு ‘வெறும் 4.5 பில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவைப்படும் ஹிண்டராப் ஐந்து ஆண்டு பெருந்திட்டத்தை பக்காத்தான் அங்கீகரிக்காதது குறித்தும் வேதமூர்த்தி வருத்தமடைந்துள்ளார்.
“அந்தத் தொகை மனித மூலதனத்துக்குச் செய்யப்படும் மறு முதலீடு எனப் பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் அது ஒதுக்கப்பட்ட மக்களுடைய வாழ்க்கையில் மேம்பாட்டையும் வளர்ச்சியையும் கொண்டு வரும்.” என்றார் அவர்.
அன்வாருடனும் மற்ற பக்காத்தான் தலைவர்களுடனும் நடத்தப்பட்ட பல சந்திப்புக்களில் அந்த ஆவணத்தில் உள்ள கோரிக்கைகள் ‘கொள்கை அளவில்’ ஏற்றுக் கொள்ளப்படுவதாக வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் இது நிகழ்ந்துள்ளது.
அந்தப் பெருந்திட்டத்தை ஏற்றுக் கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் பக்காத்தானுடைய விருப்புரிமை என்பதை ஒப்புக் கொண்ட வேதமூர்த்தி, மாற்றம் ஏற்படுவதற்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு இழக்கப்பட்டு விட்டது குறித்தே நாங்கள் பெரிதும் கவலைப்படுகிறோம் என்றார்.