பொதுத் தேர்தலில் போட்டியிட மஇகா இளைஞர் பிரிவு ஆதரவு தேடாது

mohan13வது பொதுத் தேர்தலில் எந்த ஒரு தொகுதியிலும் போட்டியிடுவதற்கு ஆதரவு தேட மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டி மோகன் விரும்பவில்லை. வேட்பாளாராக தெரிவு செய்யப்படும் யாரையும் அவர் ஆதரிப்பார்.

இருந்தாலும் தாம் பொதுத் தேர்தலில் ஒரு வேட்பாளாராக நிறுத்தப்பட வேண்டுமா இல்லையா  என்பதை முடிவு செய்யும் பொறுப்பை தாம் கட்சித் தலைவர் ஜி பழனிவேலிடம் விட்டு விடுவதாக அவர் சொன்னார்.

“மஇகா இளைஞர் பிரிவு கட்சித் தலைவரிடம் சமர்பித்த சாத்தியமான வேட்பாளர் பட்டியலில் என் பெயரைக் கூட நான் முன்மொழியவில்லை.”

“வேட்பாளர்களாக தெரிவு செய்யப்படுவதற்கு நான் இளைஞர் பிரிவைச் சேர்ந்த 12 பேரை முன்மொழிந்துள்ளேன். அவர்கள் தொழில் நிபுணர்கள், மக்களுக்கு நட்புறவானவர்கள்,” என அவர் சொன்னார்.

ஷா அலாமில் காணாமல் போனதாக கூறப்பட்டுள்ள ஏ ஹேமாவதியின் குடும்பத்தினரை இன்று சந்தித்த பின்னர் மோகன் நிருபர்களிடம் பேசினார்.

பொதுத் தேர்தலில் மூன்று இடங்களில் போட்டியிட மஇகா இளைஞர் பிரிவு விருப்பம் தெரிவித்ததாகவும் அவர் சொன்னார்.

கடந்த பொதுத் தேர்தலில் இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளும் மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் மஇகா இளைஞர் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால் ஜோகூரில் உள்ள காம்பிர், காஹாங் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே அது வெற்றி அடைந்தது.

2008ல் மோகன் பத்துகேவ்ஸ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அந்தத் தேர்தலில் மஇகா இளைஞர் பிரிவு சுபாங், கோத்தா ராஜா ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளை இழந்தது.

எதிர்த்தரப்புக் கூட்டணி திங்கட்கிழமை வெளியிட்ட தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்திய சமூக மேம்பாட்டுக்கு திட்டங்கள் ஏதுமில்லை என்றும் மோகன் சொன்னார்.

ஹேமாவதியின் வீட்டுக்கு தாம் அளித்த வருகை பற்றிக் குறிப்பிட்ட அவர், பிப்ரவரி 20ம் தேதி முதல் காணாமல் போயுள்ள அந்த 13 வயது சிறுமியைக் கண்டு பிடிப்பதற்குப் பொது மக்கள் உதவ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

அந்தச் சிறுமியை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிப்பதற்கு உதவும் தகவலை அளிக்கும் யாருக்கும் இளைஞர் பிரிவு 10,000 ரிங்கிட் வெகுமதி அளிக்கும் என்றும் மோகன் அறிவித்தார்.

பெர்னாமா