இன்று காலை சாலை விபத்தொன்றில் மரணமடைந்த கவிஞர், மொழிப்பெயர்ப்பாளர், கட்டுரை எழுத்தாளர், செய்தி ஆசிரியர் திரு. பா.அ. சிவம் குறித்து நினைவலைகளைப் பகிர்வதில் பெரும் துயர் கொள்கின்றோம்.
செம்பருத்தி மாத இதழ் வெளிவந்த தொடக்க கால கட்டங்களில் சிவத்தின் படைப்புகள் வெளிவராத இதழ்கள் மிகக் குறைவு எனக் கூறலாம். வீரியமிக்க நடை, வளமிக்க மொழியாற்றல், படைப்பாக்கத் திறன் இயல்பிலேயே அமையப் பெற்றிருந்த சிவம், தோட்ட வாழ்வு குறித்த அனுபங்கள், பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் அவலக்கேடுகள் , சமூக சீர்கேடுகள், அரசியல் சீர்திருந்தங்கள் குறித்த எண்ணற்ற படைப்புகளை செம்பருத்திக்கு எழுதியுள்ளார்.
வல்லினம் வெளியீடாக ‘பின்னர் அப்பறவை மீண்டும் பூமிக்கு திரும்பியது’ என்ற மொழிபெயர்ப்புக் கவிதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். மலேசிய அரசியலமைப்புச் சட்டத்தை தமிழில் மொழிப்பெயர்த்து அதனையும் வெளியீடு செய்திருந்தார். மிக அண்மையில் சீ. முத்துச்சாமியின் சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழாவையும் மிகச் சிறப்பாக நடத்தியிருந்தார்.
மலேசியத் தமிழிலக்கிய உலகில் மொழியாக்கம் மிக மிகக் குறைவாகவே நிகழ்கின்றது. அவற்றுள் வெற்றி பெற்ற படைப்பாக்கம் என்பது அரிதிலும் அரிதாகவே உள்ளது. மிகச் சில எழுத்தாளர்களே இத்துறையில் (மொழிப்பெயர்ப்பு) வெற்றி பெற்றவர்களாக உள்ளனர். அவர்களுள் பா.அ. சிவம் தனித்து விளங்கியவர்.
உற்றதை உணர்த்தும் ஆற்றலும் திறனும் இவருக்கு உண்டு. உணர்வினையும் மொழியையும் கடந்து புதியதொரு அடைவினை இவரது படைப்புகள் தோற்றுவித்தன.
மொழிபெயர்ப்பின் வழி இலக்கியத்தின் மற்றுமொரு வாசலைத் திறந்து விட்ட இந்த பறவை இவ்வளவு சிறு வயதில் தன் சிறகுகளை முடக்கிக் கொண்டது, நினைத்துப் பார்க்க முடியாத சோகம்!
மலேசிய நவீன தமிழ் இலக்கியத்தில் மிகக் குறுகிய காலத்தில் மிக மிக நிறைவான ஆளுமையால் தடம் பதித்த பா.ஆ. சிவத்தின் மறைவு – மிகப் பெரிய துயரம்!
“ஏடுகள் கண்ணீர்த்துளிகளால் ஈரமாகிப் போகின்றன…..”
-செம்பருத்தி குடும்பம்