ஜனநாயகத்தை நோக்கி நமது நாட்டு மக்கள் மேற்கொண்ட கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகால பயணத்தில் எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையும்.
அந்த வரலாற்றுப்பூர்வ திருப்புமுனை நமது நாட்டை ஒரு நிலையான, முதிர்ச்சியடைந்த, ஜனநாயக தேசமாக்க வழிவகுக்கும் என்பதை கவனத்தில் கொண்டு மலேசிய நாட்டு மக்களும், அரசியல் கட்சிகளும், தேர்தல் ஆணையமும், நீதிமன்றங்களும், ஊடகங்களும் அவற்றின் கடமைகளையும், பொறுப்புகளையும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்ற வேண்டுகோளை ஜிபிஎம் என்று அழைக்கப்படும் மலேசிய செயல்திட்ட கூட்டமைப்பு நேற்று காலை மணி 11.00 க்கு கோலாலம்பூர் சீன அசெம்பிளி மண்டபத்தில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டது.
25 பல்லின, பலசமய, கட்சி சார்பற்ற அமைப்புகளின் கூட்டமைப்பான ஜிபிஎம் அமைப்பின் தலைவர் தான் இயு சின் நிகழ்ச்சியின் முதல் அங்கமாக சாபா மாநிலத்தில் தற்போது நடந்து கொண்டிருக்கும் மோதலில் உயிர் இழந்த மலேசிய வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு ஜிபிஎம்மின் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தார். அத்தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஜிபிஎம்மின் பொதுத் தேர்தல் வேண்டுகோள்களின் சாரத்தை அவர் செய்தியாளர்களுக்கு விளக்கினார்.
எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தல் சுயேட்சையாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதை அனைவரும் விரும்புகின்றனர். ஆனால், உறுதிபடுத்தப்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
திருப்புமுனையாக அமையவிருக்கும் 13 ஆவது பொதுத் தேர்தல் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நடத்தப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு ஐநா மற்றும் காமன்வெல்த் அமைப்புகளின் அங்கீகாரம் பெற்ற கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படுவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டது.
இது ஒரு முக்கியமான வேண்டுகோள் என்பதால், தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரடியாக சந்திக்கவும் முடிவு செய்யப்பட்டது.
ஜிபிஎம் வெளியிட்ட முழுமையான அறிக்கை:
ஒரு பல்லின, பலசமய, கட்சி சார்பற்ற 25 அரசு சாரா அமைப்புகளின் கூட்டணியான மலேசிய செயல்திட்ட கூட்டமைப்பு (Gabungan Bertindak Malaysia (ஜிபிஎம்)) ஒரு சிறந்த மலேசியாவை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை அதன் கடப்பாடாகக் கொண்டுள்ளது.
நமது நாடு ஒரு நிலையான, முதிர்ச்சியடைந்த, ஜனநாயக தேசமாவதற்கான அதன் பயணத்தில் எதிர்வரும் 13 ஆவது பொதுத் தேர்தல் ஒரு வரலாற்றுப்பூர்வமான திருப்புமுனையைப் பிரதிநிதிக்கிறது என்பதை முழுமையாகக் கவனத்தில் கொண்டு
நாங்கள் அரசியல் கட்சிகளுக்கு விடுக்கும் வேண்டுகோள்:
1) மக்கள் சுயேட்சையான, நியாயமான மற்றும் தூய தேர்தலையும் ஜனநாயக முறையிலான தேர்தல் கோட்பாடுகளும் நடைமுறைகளும் நிலைநிறுத்தப்படுவதை விரும்புகிறார்கள். அவ்விருப்பங்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும்;
2) ஒருவரை ஒருவர் இகழ்ந்து பேசாமல், மக்களுக்கும் நாட்டுக்கும் பலன் அளிக்கும் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் அடிப்படையில் தேர்தல் பரப்புரை செய்ய வேண்டும்;
3) சமயம், இனம், பாலியல் சார்வு மற்றும் கோட்பாடுகள் குறித்த பிரச்னைகளைத் திரித்து சுயநலத்திற்காக பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும்; மேலும்
4) அரசியல் வன்செயல்கள் அனைத்தையும் கண்டிப்பதோடு அவற்றை தவிர்க்க வேண்டும்.
நாங்கள் அனைத்து அரசு துறைகளுக்கும் விடுக்கும் வேண்டுகோள்:
1) மலேசிய அரசமைப்புச் சாசனத்தில் அளிக்கப்பட்டிருக்கும் பாரபட்சமின்மை மற்றும் நடுநிலை ஆகிய கோட்பாடுகளை நிலைநிறுத்த வேண்டும்;
2) அரசமைப்பு சாசனம் மற்றும் நடப்பில் இருக்கும் சட்டம் (தேர்தல் ஆணையம்)ஆகியவற்றில் வரையறுக்கப்பட்டுள்ளவாறு தேர்தல்கள் சுயேட்சையாகவும் கட்சி-சார்பில்லாமலும் இருப்பதை மேற்பார்வை செய்து நடத்த வேண்டும்;
3) “இடைக்கால அரசாங்கம்” செயல்படும் காலகட்டத்தில் நாட்டின் விவகாரங்களை நிருவகிப்பதிலும், தேர்தல் ஆணையம் தேர்தல் நடைமுறைகளை நிருவகிப்பதில் அதற்கு உதவிகள் வழங்குவதிலும் (பொதுப்பணி துறை மற்றும் பாதுகாப்புத் துறை) மிக உயர்ந்த தொழிலியல் தரத்தை கடைபிடிக்க வேண்டும்;
4) தேர்தல் முடிவுகள் சம்பந்தப்பட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதில் மிக உன்னதக் கோட்பாடான அதிகாரப் பகுத்தல் தயவு தாட்சிணியம் இன்றி நிலைநிறுத்தப்பட வேண்டும் (நீதிபரிபாலனத் துறை); மேலும்
5) மக்களின் தீர்ப்பை மதித்து 13 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் அமைதியான முறையில் ஏற்படுவதை உறுதி செய்ய வேண்டும். புதிய மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் அமைக்கப்படுவதில் பெடரல் அரசமைப்புச் சட்டம் மற்றும் மாநிலங்களின் அரசமைப்புச் சட்டங்களின் உணர்வுகளும் விதிகளும் கடைபிடிக்கப்பட வேண்டும்.
நாங்கள் ஊடகங்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்:
தேர்தல்கள் குறித்து நியாயமாகவும் பொறுப்புடனும் செய்திகள் வெளியிட வேண்டும் என்பதோடு ஊடகத் தொழில் நன்நடத்தை தொகுப்பில் வரையறுக்கப்பட்டிருக்கும் ஊடகத் தொழிலியத்தின் மிக உன்னதத் தரத்தை கடைபிடிக்க வேண்டும்.
நாங்கள் மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்:
அரசமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் வாக்கு உரிமையை பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்பதோடு நமது ஜனநாயக நாடாளுமன்ற அமைவுக்கு ஏற்ப பெரும்பான்மை தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு விடுக்கும் வேண்டுகோள்:
சபா மாநிலத்தில் நடைபெற்று வரும் அரச ஆணைய விசாரணையின் விளைவாக மக்கள் மனதில் தோன்றியிருக்கும் சந்தேகங்களைக் கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் மன்றம் மற்றும் காமன்வெல்த் கண்காணிப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். இது சுயேட்சையான, நியாயமான, தூய தேர்தல் நடைமுறைகள் மீது மக்களின் நம்பிக்கை மீண்டும் வளர உதவும் என்பதோடு உலக சமுதாயத்தில் மலேசியாவின் தோற்றம் உயர்த்தும்.
இறுதியாக, இயங்கிக் கொண்டிருக்கும் மற்றும் ஒப்பேறக் கூடிய ஜனநாயகம் தேர்தல் நாளோடு முடிவடைந்து விடுவதில்லை என்பதை நாம் உணர்ந்திருக்க வேண்டும். மக்கள் நமது எதிர்காலத்திற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதோடு தேர்தல் காலங்களில் அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அவர்களின் பொறுப்பை நாம் உறுதி செய்ய வேண்டும்.
கடப் பாடுடைய அனைவருக்கும் ஜிபிஎம்மின் வேண்டுகோள்:
நாம் போற்றி பேணும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு இவற்றில் ஈடுபாடும் கடப்பாடும் கொண்டுள்ள அனைவரும் நிலையான கருத்துப் பரிமாற்றங்களில் பங்கேற்க வேண்டும்.