லஹாட் டத்துவில் புதிதாக மூண்ட சண்டையில் ஓர் ஊடுருவல்காரர் கொல்லப்பட்டார்

mediaலஹாட் டத்து, கம்போங் தண்டுவோ-வில் நேற்று ஆகாய, தரைத் தாக்குதல்கள் நடத்தபட்ட பின்னர் இன்று காலை புதிதாக சண்டை மூண்டது.

“இன்று காலை மணி 6.45 வாக்கில் நமது பாதுகாப்புப் படைகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதனால் பாதுகாப்புப் படைகள் திருப்பிச் சுட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஓர் எதிரி சுடப்பட்டதாக நம்பப்படுகின்றது. அவர் கொல்லப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம்,” என தேசிய போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமார் லஹாட் டத்துவில் நிருபர்களிடம் கூறினார்.

“ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தச் சடலம் இன்னும் மீட்கப்படவில்லை,” என அவர் சொன்னார். கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள ஆயுதப் படைகளுக்கும் போலீசாருக்கும் இதுவரையில் எந்த உயிருடற்சேதமும் இல்லை என அவர் தெரிவித்தார்.

ஆனால் ஊடுருவல்காரர்களுக்கு ஏற்பட்ட உயிருடற்சேதம் பற்றி இஸ்மாயில் எதுவும் கூறவில்லை.

நேற்றைய ‘Ops Daulat’ நடவடிக்கையில் 30 சுலு ஊடுருவல்காரர்கள் கொல்லப்பட்டதாக உத்துசான் மலேசியா இன்று கூறிக் கொண்டுள்ளது.

தனது செய்திக்கான ஆதாரத்தை ஆந்த ஏடு தெரிவிக்கவில்லை. நேற்று வரை 49 சுலு ஊடுருவல்காரர்கள் கொல்லப்பட்டதாக அது தெரிவித்தது.

லஹாட் டத்துவில் ஆயுதமேந்திய கும்பலுக்கு தலைமை தாங்கிய சுலு சுல்தான் ஜமாலுல் கிராமின் சகோதரர் அஸ்ஸிமுடி கிராம் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கும் வதந்தியை உறுதி செய்ய முடியவில்லை.

இதனிடையே நேற்று மேற்கொள்ளப்பட்ட ‘துடைத்தொழிப்பு’ நடவடிக்கையின் போது எதிரிகளின் 20 முதல் 30 சடலங்களைப் பாதுகாப்புப் படைகள் கண்டு பிடித்ததாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனால் அந்தச் செய்தியை உறுதி செய்ய முடியவில்லை.