பக்காத்தான் எம்பிகள் அவசரக் கூட்டத்துக்குக் கோரிக்கை

மாற்றரசுக் கட்சியான பக்காத்தான் ரக்யாட்டின் எம்பிகள், லாஹாட் டத்து நெருக்கடி குறித்து விவாதிக்க நாடாளுமன்ற அவசரக் கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

“222 எம்பிகள் உள்ளனர். (லாஹாட் டத்து பற்றி) பிஎன் எம்பிகள் மட்டும் தெரிந்துகொண்டால் போதாது”, என்று பிகேஆர் சுங்கை பட்டாணி எம்பி ஜொஹாரி அப்துல் கூறினார். அவர் பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் பேசினார்.

இந்த நெருக்கடி பற்றி மக்களும் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது என்பதை அவர் அரசுக்கு நினைவுறுத்தினார். அந்த வகையில் மக்கள் பிரதிநிதிகளான எம்பிகளுக்கு அதைப் பற்றி விளக்கமளிக்கப்பட வேண்டும் என்றார்.

1pakatan1ஊடுருவல்காரர்கள் எல்லைக் கண்காணிப்பைத் தாண்டி எப்படி நாட்டுக்குள் நுழைந்தார்கள், நிலவரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு போலீசாருக்குத் தேவையானதெல்லாம் கொடுக்கப்பட்டுள்ளதா, லாஹாட் டத்து சண்டை மற்ற பகுதிகளுக்குப் பரவும் அபாயம் உண்டா என்றெல்லாம் மக்கள் கவலையுறுவதாக அவர் கூறினார்.

பாஸ் கட்சியின் பேராளராக அச்செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஷா ஆலம் எம்பி அப்துல் காலிட் சமட், சூலு சுல்தான் பிரதிநிதிகளுடன் ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் உடன்பாடு குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிட மறுப்பதாக பிலிப்பீன் ஊடகங்கள் கூறியுள்ளன என்றார்.

அவற்றை வெளியிடுவது அவசியம் என்று அப்துல் காலிட் கூறினார்.

முறையான தகவல்கள் இன்றி எம்பிகளும் மக்களும் உண்மை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள இயலாது.

“இது முக்கியமான விவகாரம் அல்ல என்பதுபோல அரசு நடந்துகொள்கிறது”, என்றவர் வருத்தப்பட்டார்.

உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன், லாஹாட் டத்து ஆக்கிரமிப்பாளர்களை ஒரு மிரட்டல் அல்ல என்று ஒதுக்கித்தள்ளியதையும் பிரதமர்துறை அமைச்சர் முகம்மட் நஸ்ரி அப்துல் அஜீஸ் (இடம்) அது ஊடுருவல்தான் போர் அல்ல என்று அறிக்கை விடுத்ததையும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய மூன்றாமவர் டிஏபி புக்கிட் பெண்டேரா எம்பி லியு சின் தொங். தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விபகாரங்களில் இரு தரப்பின் ஈடுபாடும் இருப்பது முக்கியம் என்றார்.

“ஜனநாயக நாடுகளில் வெளிமிரட்டல் ஏற்படும் வேளைகளில் அதைக் கையாள்வதில் ஆளும் தரப்பும் எதிர்த்தரப்பும் சேர்ந்தே ஈடுபடும். இரு தரப்பினரும் அழைக்கப்பட்டு விளக்கமளிக்கப்படும்”, என்றார்.

டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங்,  இவ்விவகாரம் குறித்து நஸ்ரியுடன் விவாதித்தார் என்றும், நஸ்ரி நாடாளுமன்ற அவசரக் கூட்டத்தைக் கூட்டும் அதிகாரம் பிரதமருக்கு மட்டுமே உண்டு கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.