சூலு ஊடுருவல்காரர்களை வலுப்படுத்தும் முயற்சிகளை பிலிப்பீன் போலீசார் தடுத்தனர்

1 copசூலு  ஊடுருவல்காரர்களைப்  பலப்படுத்த மேலும் பல பிலிப்பினோக்கள் முயற்சி மேற்கொண்டதாகவும் பிலிப்பீன் போலீசார் அவற்றைத் தடுத்து விட்டதாகவும் பிலிப்பீன்ஸ் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

“அவர்களைத் தடுக்க வேண்டும் என்பது மேலிட உத்தரவு”,  என தாவி-தாவி மாநில போலீஸ் இயக்குனர் ஜோசலிடோ சலிடோ பிலிப்பீன் ஸ்டார் செய்தித்தாளிடம் கூறினார்.

சூலு சுல்தானின்  ஆதரவாளர்கள் சுமார் 67 பேர் சாபா செல்லும்  திட்டத்துடன் பொங்காவ் வந்தார்கள் என்றும் அவர்களுடன் விவாதித்து அத்திட்டத்தைக் கைவிடுமாறு செய்ததாகவும்  அவர்  தெரிவித்தார்.

பொங்காவ், பிலிப்பீன்சின் தாவி-தாவி மாநிலத்தில் உள்ள ஒரு நகரமாகும். அது லாஹாட் டத்துவுக்கு கிழக்கே 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

“அவர்களிடம் பேசினோம். அவர்களின் திட்டத்தால் பிரச்னை மேலும் மோசமடையும் என்பதால் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்”, என்று சலிடோ தெரிவித்தார்.

பொங்காவில் பிரச்னை எதுவுலில்லை அமைதியாக உள்ளது என்றார்.

1 cop sulஇதனிடையே, சூலு சுல்தானாக தம்மைச் சுயமாக பிரகடனம் செய்துகொண்டிருக்கும்  ஜமாலுல் கிராம் (இடம்), தம் ஆதரவாளர்கள் சாபா செல்ல நினைத்தால் தம்மால் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது என்று கூறியதாக பிலிப்பீன்ஸ் தொலைக்காட்சியான டிவி 5-இன் இணைய செய்தித்தளமான InterAksyon.com கூறியது.

மேலும் ஆதரவாளர்களை சாபாவுக்கு அனுப்பி வைப்பாரா என்று கேட்டதற்கு கிராம் சொன்னார்: “அங்கிருப்பவர்களே போதும். அவர்கள் அங்கு சண்டையிடச் செல்லவில்லை. அங்கேயே தங்குவதற்குச் சென்றிருக்கிறார்கள். பிலிப்பீன்சில் வாழ்க்கை எவ்வளவு சிரமமானது என்பது உங்களுக்குத் தெரியும். அவர்களில் பலர் மீனவர்கள். மற்றவர்கள் விவசாயிகள்”.

நேற்றிரவு, ஆயுதக் கும்பலுக்குத் தலைமைதாங்கும் தம் சகோதரர் அஸ்ஸிமுடியுடன் பேசியதாகவும் நேற்றைய மலேசிய இராணுவத் தாக்குதலில் தம் தரப்பில் எந்தப் பாதிப்பும் இல்லை என அவர் தெரிவித்ததாகவும் ஜமாலுல் கூறினார்.

ABS-CBNnews.com, ஜமாலுல் தம் ஆதரவாளர்களைப் “பயங்கரவாதிகள்” என்று கோலாலும்பூர் முத்திரை குத்தியிருப்பதைச் சாடினார் எனக் கூறியுள்ளது.

சாபாவில் உலக நாடுகள் தலையிடுவதைத் தடுக்க அப்படி முத்திரை குத்தப்பட்டிருப்பதாக சுல்தானின் புதல்வி ஜெசல் கிராம் கூறினார்.