கொல்லப்பட்ட 12 ஊடுருவல்காரர்களின் படங்கள் வெளியிடப்பட்டன

Bodiesகம்போங் தண்டுவோ-வில் மேற்கொள்ளப்பட்ட துடைத்தொழிப்பு நடவடிக்கையில் எதிரிகளில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதை அரசாங்கம் இன்று உறுதி செய்தது.

கொல்லப்பட்டவர்களில் 12 பேர்களுடைய படங்களையும் அது வெளியிட்டது.

“உண்மையில் என்ன நடக்கிறது என்பதை இது காட்டுகின்றது. ஜோடனை அல்ல. களத்தில் காணப்படும் நிலவரம் இதுவாகும்.” என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் லஹாட் டத்து பெல்டா சஹாபாட் இல்லத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார்.

அந்த நிருபர்கள் சந்திப்பில் உடனிருந்த தற்காப்பு அமைச்சர் 9 சடலங்கள் ஒன்றாகக் கிடந்த படத்தைக் காட்டினார்.

புதைகுழி ஒன்றில் மூன்று சடலங்கள் இருப்பதை இன்னொரு படம் காட்டியது.

“பொது மக்களிடையே உணர்ச்சியைத் தூண்டாதவை என நாங்கள் கருதும் படங்களில் உள்ளவர்களை மட்டுமே நாங்கள் உறுதி செய்கிறோம்,” என ஹிஷாமுடின் சொன்னார்.

என்றாலும் அவர் அந்தப் புகைப்படங்களில் உள்ளவர்களைத் தவிர சுலு தரப்பில் ஏற்பட்டுள்ள உயிருடற்சேதங்களின் முழு எண்ணிக்கையை வெளியிட மறுத்து விட்டார்.

இன்று காலை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் மேலும் ஒரு ஊடுருவல்காரர் கொல்லப்பட்டதைச் சேர்த்து கம்போங் தண்டுவோ மீது நடத்தப்பட்ட குண்டு வீச்சுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர் எண்ணிக்கை 13 ஆகும்.

களத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து போதுமான தகவல்கள் இல்லை என ஊடகங்கள் புகார் செய்ததைத் தொடர்ந்து ஆள் இல்லாத ஆகாய வாகனம் ஒன்றினால் எடுக்கப்பட்ட போர்க்கள் படங்களை வழங்குவதாக அகமட் ஸாஹிட் இன்று காலையில் உறுதி அளித்திருந்தார்.