பக்காத்தான் ராக்யாட் கொள்கை அறிக்கை மீதான இந்திய சமூகத்தின் கருத்துக்களைத் தாம் செவிமடுத்துள்ளதாகவும் அந்த சமூகத்தின் தேவைகள் மீதான சிறப்பு விவரங்கள் பக்காத்தான் கொள்கை அறிக்கையில் சேர்க்கப்படும் என்றும் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
“இந்திய சமூகத் தலைவர்களுடைய எண்ணங்களை அறிந்து கொள்வதற்காக நான் கடந்த வாரத்திருந்து அவர்களுடன் பல விவாதங்களை நடத்தியுள்ளேன்,” என அன்வார் இன்று விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் இந்திய சமூகத்தைப் பாதிக்கின்ற பல விஷயங்கள் விவரமாகக் கூறப்பட்டுள்ளன.
“அந்த விஷயங்கள் பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. பக்காத்தான் ஏற்கனவே விடுத்த அறிவிப்புக்கள், கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தல் கொள்கை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.”
“இருந்தாலும் தங்கள் நிலையை எங்களுக்கு தெரியப்படுத்தியுள்ள அமைப்புக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, எங்கள் கடப்பாட்டை மேலும் வெளிப்படையாக தெரிவிக்கவும் வலுப்படுத்தவும் அந்த விவரங்கள் பக்காத்தான் ராக்யாட் கொள்கை அறிக்கையில் மேலும் விவரமாக சேர்க்கப்பட்டு விநியோகம் செய்யப்படும்.
இந்தியர் பிரச்னைகள் தொடர்பாக நேரடியான சில அம்சங்களையும் அவர் விவரித்தார்:
1. இந்தியர்களும் விடுபட்டு விடாமல் ‘மலேசியாவில் நீண்ட காலமாக நீடிக்கும் நாடற்ற மக்கள் பிரச்னை’ பக்காத்தான் நிர்வாகத்தின் 100 நாட்களில் தீர்க்கப்படும்.
2. பள்ளிப்படிப்பை முடித்து வெளியேறுகின்றவர்களுக்கு தொழில்நுட்பப் பயிற்சியும் வேலை வாய்ப்புக்களும் வழங்கப்பட்டு அதில் இந்திய சமூகத்தைச் சார்ந்தவர்கள் அதிக அளவில் நன்மை அடைவது வலியுறுத்தப்படும்.
3. எல்லாத் தமிழ்ப் பள்ளிக்கூடங்களும் முழு நிதி உதவி பெறுவதும் தேசியக் கல்வித் தரங்களுக்கு இணையான அடிப்படை வசதிகளைப் பெறுவதும் உறுதி செய்யப்படும்.
4. நாடு முழுவதும் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தர நிலப்பட்டாவைக் கொண்ட வீடுகளை கட்டுவது மீது கவனம் செலுத்துவதையும் உள்ளடக்கிய தாங்கக் கூடிய விலையில் வீடுகளைக் கட்டுவதற்கு தேசிய வீடமைப்பு வாரியம் ஒன்று அமைக்கப்படும்.
போலீஸ் படை சீர்திருத்தம் செய்யப்படுவதோடு நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் போலீஸ் நன்னடத்தை புகார்கள் ஆணையம் அமைக்கப்படும் என்றும் அன்வார் சொன்னார்.
இந்தியர்கள் உட்பட எல்லா மலேசியர்களுடைய நன்மைக்காக தேவை அடிப்படையை பக்கத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை கடைப்பிடிப்பதாகக் கூறப்பட்டாலும் அது தமிழ் சமூகத்தைக் ஈர்க்கத் தவறி விட்டது.
சீன, ஒராங் அஸ்லி போன்ற சமூகங்களுடைய சிறப்புப் பிரச்னைகளை அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ள வேளையில் இந்திய சமூகத்தின் சிறப்புத் தேவைகள் அதில் விடுபட்டுள்ளதாக ஹிண்ட்ராப் தலைவர்கள் குறை கூறியிருந்தனர்.
தேவை அடிப்படை அணுகுமுறை நிலைக்களனாகும்
அந்த விவரங்கள் ஆளுமையில் தேவை அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்றும் தனது கடமையிலிருந்து பக்காத்தானை விலகச் செய்யாது என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
“தேர்தல் கொள்கை அறிக்கையில் காணப்படும் விஷயங்களை மேலும் தெளிவுபடுத்துவதற்கு பல்வேறு தரப்புக்களின் யோசனைகளைப் பரிசீலிக்க நான் தயாராக இருக்கிறேன். ஆனால் அவை இன அரசியலை நிராகரித்து, நல்ல ஆளுமையையும் மக்களுக்கு நீதியையும் வழங்கும் பக்காத்தான் ராக்யாட் கொள்கைகளில் திருத்தம் செய்யக் கூடாது.”
“பாரிசான் நேசனல் திட்டங்கள் ஒவ்வொன்றும் இன அடிப்படையைக் கொண்டிருந்ததால் அவை தோல்வி கண்டன,” என்றார் அன்வார்.
“அதனால் தேவை அடிப்படையில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் திட்டங்களை வெற்றிகரமாக அமல் செய்ய முடியும் நான் வலியுறுத்துகிறேன்.”
எடுத்துக்காட்டுக்கு பள்ளிப்படிப்பை முடிப்பவர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கும் ராக்யாட் பயிற்சி திட்டத்துக்கு சமூகத்தின் எல்லா நிலைகளையும் எல்லா இனங்களையும் சார்ந்த மக்களுடைய ஒத்துழைப்புத் தேவைப்படுகின்றது என அவர் சொன்னார்.