அஸ்ருல்: பக்காத்தான் வெற்றி சந்தையின் மீது ஏற்படுத்தும் தாக்கம் வரம்புக்கு உட்பட்டிருக்கும்

azrulஅடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் வெற்றி பெறும் என தாம் கூறிய ஆரூடம் மெய்யானால் அது தொடக்கத்தில் நாட்டின் பொருளாதாரம் மீது அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அதனால் ஏற்படும் தாக்கம் வரம்புக்கு உட்பட்டிருக்கும் என்றும் பாங்க் இஸ்லாம் வேலை நீக்கம் செய்துள்ள பொருளாதார வல்லுநர் அஸ்ருல் அஸ்வார் அகமட் தாஜுடின் கூறுகிறார்.

“13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அரசியல் நிலைத்தன்மை, நிர்வாக முரண்பாடுகள் போன்ற அச்சம் காரணமாக முதல் நாளன்று நாம் ஒரளவு அதிர்ச்சியை எதிர்பார்க்கலாம். அதன் விளைவாக பங்குகள் மீட்டுக் கொள்ளப்படலாம். அந்நியச் செலவாணிச் சந்தையிலும் தாக்கம் இருக்கும்.”

“பங்கு மூலதனம் வெளியேறுவதும் அதிகரிக்கக் கூடும். நேரடி வர்த்தக முதலீடுகளும் வெளியேறக் கூடும்,” என அவர் நேற்றிரவு அரசியல் மாற்றத்தில் பொருளாதார நிர்வாகம் என்னும் தலைப்பில் நடைபெற்ற ஆய்வரங்கில் கூறினார்.

என்றாலும் பக்காத்தான் வெற்றி பெறக் கூடிய சாத்தியத்தை வர்த்தக சமூகம் ஏற்கனவே ஏற்றுக் கொண்டிருப்பதால் தாக்கம் குறைந்த அளவுக்கே இருக்கும் என அஸ்ருல் கருதுகிறார்.

“எடுத்துக்காட்டுக்கு பங்குச் சந்தையிலும் அந்நியச் செலாவணிச் சந்தையிலும் நிகழ்கின்ற ஏற்ற இறக்கங்களைப் பார்க்கும் போது வர்த்தக சமூகம் அத்தகைய  சாத்தியத்திற்குத் தயாராகி வருவதாகவே தெரிகிறது,” என அவர் கூறிக் கொண்டார்.

இப்போது கூட கோலாலம்பூர் கம்போசிட் குறியீட்டில் அந்நிய முதலீட்டாளர்களின் பங்குகள் 20 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.azrul1

“ஆகவே 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் வெளியேறுவதற்கு அந்நிய மூலதனம் நிறைய இல்லை,” என அவர் சொன்னார்.

“மலேசிய நிதிச் சந்தையும் பொருளாதாரமும் சரிவு காண்பதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. நமது பொருளாதாரத்திற்கு பேரழிவு ஏற்படாது என நான் உறுதியாகச் சொல்வேன். காரணம் நமது பொருளாதாரம் எந்த குறுகிய காலத் தாக்கத்தையும் சமாளிக்க வல்லது. ”

உலகப் பொருளாதார மீட்சி, யூரோ நாணய நெருக்கடியைத் தீர்க்கும் முயற்சிகள் ஆகியவை எந்த அதிர்ச்சியையும் தாங்கிக் கொள்வதற்கு உதவும் என்றும் அஸ்ருல் சொன்னார்.

அஸ்ருல் தற்போது பிகேஆர் கட்சியுடன் தொடர்புடைய Institut Rakyat-ல் ஒர் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.