சொங் இயு-வின் மகன் புக்கிட் பெண்டேராவில் போட்டியிடுவார்

1chong

முன்னாள் பினாங்கு முதல்வர், காலஞ்சென்ற டாக்டர் லிம் சொங் இயுவின் புதல்வர் சியன் செங், புக்கிட் பெண்டேரா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறது.

லிம்மின் நான்கு மகன்களில் ஆக இளையவரான சியன் செங், தந்தையைப் பின்பற்றி தீவிர அரசியலில் குதிக்கிறார் என த ஸ்டார் நாளேடு கூறிற்று.

அவர் 10 ஆண்டுகளுக்குமேலாக அரசியலில் ஆர்வம் காட்டியதில்லை என்பதால் இச்செய்தி கெராக்கான் தலைவர்கள் பலருக்கு வியப்பைத் தந்தது.

மாநில கெராக்கான் தலைவர் டெங் செங் இயோ, புக்கிட் தெங்காவில் மாநிலச் சட்டமன்றத்துக்குப் போட்டியிடுவார் என்றும் அந்நாளேடு தெரிவித்தது.

புக்கிட் பெண்டேராவின் முன்னாள் எம்பியும் கெராக்கான் முன்னாள் தலைமைச் செயலாளருமான சியா க்வாங் சை, தஞ்சோங் பூங்கா சட்டமன்றத் தொகுதியில் களபிறங்குவார். சியா மூன்று தவணைகளுக்கு புக்கிட் பெண்டேரா எம்பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே சினார் ஹரியான், புத்ராஜெயா பாஸ்  கட்சி உதவித் தலைவர் ஹுசாம் மூசா அங்கு போட்டியிட வேண்டும் என விரும்புவதாக அறிவித்துள்ளது.

1chong2அதன் நடப்பு எம்பியான அம்னோ தலைமைச் செயலாளர் துங்கு அட்னான் துங்கு மன்சூர்  குறுகிய பெரும்பான்மையில்தான் அங்கு வெற்றிபெற்றார் என்பதால்  ஹுசாம் (வலம்) அங்கு களமிறங்கினால் பாஸ் வெற்றிபெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என புத்ராஜெயா பாஸ் தலைவர் முகம்மட் நாசிர் சக்கரியா (வலம்)  கூறினார்.

“புத்ராஜெயாவில் ஹுசாம் வெற்றிபெறுவது இயலாத காரியமல்ல. 12வது பொதுத் தேர்தலில் கூட்டரசு பிரதேச பாஸ் ஆணையர் முகம்மட் நோர் குறைந்த வாக்கு வேறுபாட்டில்தான் துங்கு அட்னானிடம் தோல்வி அடைந்தார்.

“ஆனால் அதை (ஹுசாம் போட்டியிடுவதை) பாஸ் மத்திய தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்”, என்றவர் சொன்னார்.