பெல்டா சஹாபாட் தோட்டத்தில் Ops Daulat நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ள பகுதியில் ஆயுதமில்லாத சுலு பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படைகள் இன்று காலை மணி 6.30 அளவில் கைது செய்துள்ளன.
அந்தப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட துப்பாக்கிக்காரகள் இன்னும் மறைந்திருப்பதாக நம்பப்படுகின்றது.
அடையாளப் பத்திரங்கள் ஏதும் இல்லாத அந்த ஆடவர் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதாக சபா போலீஸ் தலைவர் ஹம்சா தாயிப் சொன்னார்.
2012ம் ஆண்டுக்கான பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் அந்த ஆடவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அந்த ஆடவர் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார் என்பதைக் கூறவில்லை.
அந்தச் சட்டத்தின் கீழ் இது வரை 104 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் 232 பேர் வெவ்வேறு சட்டங்களின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஹம்சா தாயிப் சொன்னார்.
நிருபர்களை அவர் சந்தித்த போது இராணுவத்தின் முதல் பிரிவுத் தளபதி மேஜர் ஜெனரல் அகமட் ஸாக்கி மொக்தாரும் உடனிருந்தார்.
மார்ச் முதல் தேதிக்குப் பின்னர் 61 சுலு துப்பாக்கிகாரர்கள் கொல்லப்பட்டதாகவும் பயங்கரவாதிகள் இரண்டு போலீஸ் அதிகாரிகளைக் கொன்றுள்ளதாகவும் ஹம்சா சொன்னார்.
துப்பாக்கிக்காரர்களுடன் நிகழ்ந்த மோதல்களில் ஆறு போலீஸ் அதிகாரிகளும் இரண்டு வீரர்களும் கொல்லப்பட்டனர்.
பிப்ரவரி 12ம் தேதி சபாவுக்குள் ஊடுருவிய பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படைகளைத் தாக்கத் தொடங்கிய பின்னர் மார்ச் 5ம் தேதி Ops Daulat நடவடிக்கையை அரசாங்கம் மார்ச் 5ம் தேதி தொடங்கியது.
பெர்னாமா

























