பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் சுதந்திரம் கொடுக்குமாறு கல்வியாளர்கள் வேண்டுகோள்

autoபல்கலைக்கழகங்களில் கல்வித் தரம் வீழ்ச்சி அடைவதைத் தடுக்க பல்கலைக்கழகங்களுக்கு கூடுதல் சுதந்திரம் வழங்குமாறு பல கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அந்த உயர் கல்விக் கூடங்களுக்கு சொந்த நிர்வாக, நிதி விவகாரங்களை நிர்வாகம் செய்வதற்கு அப்பாலும் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும் என சமூகவியலாளரான அப்துல் ரஹ்மான் எம்போங் கூறினார்.

அரசு சேவை, சந்தை, தொழிற்சாலை, உயர்நிலைப் பள்ளிக்கூடம் ஆகியவற்றின் விரிவாகவும் பல்கலைக்கழகம்  கருதப்படக் கூடாது என்றார் அவர்.

“ஒரு பல்கலைக்கழகம் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும். அங்கு மாணவர்களும் விரிவுரையாளர்களும்  ஒன்றிணைந்து அறிவாற்றலைத் தேட வேண்டும், உற்பத்தி செய்ய வேண்டும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும், விவாதிக்க வேண்டும்,” என்றார் அவர்.auto1

ரஹ்மான் மலேசிய தேசியப் பல்கலைக்கழகத்தில் உள்ள மலேசிய அனைத்துலக ஆய்வியல் கழகத்தில் பணியாற்றுகிறார்.

“13வது பொதுத் தேர்தலும் பல்கலைக்கழகங்களின் எதிர்காலமும்” என்னும் தலைப்பில் அந்த ஆய்வரங்கு  நடத்தப்பட்டது.

மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அந்த ஆய்வரங்கில் டெரன்ஸ் கோமஸ், டயானா வோங், ஸாஹாரோம் நாயிம் ஆகியோரும் பேசினார்கள்.

மலேசியாவின் முக்கியமான தேர்தல் எனக் கருதப்படும் 13வது பொதுத் தேர்தல் குறித்து கல்வியாளர்களிடையே  விவாதங்கள் குறைவாக நிகழ்வதாக சமூகவியலாளருமான வோங் சொன்னார்.

auto2“கல்வியாளர்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும், ஆய்வுகளையும் நடத்த வேண்டும்,” என அவர் கேட்டுக் கொண்டார்.

“அது நிகழவில்லை. உண்மையில் அது போன்ற முதல் நிகழ்வு இது தான்.”

அறிவாற்றலுக்கான வளங்கள் என்ற தங்கள் பணியை பல்கலைக்கழகங்கள் ஆற்றவில்லை என்பதையே  அத்தகைய விவாதங்கள் இல்லாமை உணர்த்துகின்றது என்றார் அவர்.

அடுத்துப் பேசிய நோட்டிங்காம் பல்கலைக்கழகத்தின் மலேசிய வளாகத்தில் ஊடகப் பேராசிரியராகப்   பணியாற்றும் ஸாஹாரோம், தனியார் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் கற்பிப்பதற்கு வாரத்துக்கு 18   மணி நேரத்துக்கு மேல் செலவிடுவதாகத் தெரிவித்தார்.

அவர்கள் பல மாணவர்களுக்கு போதிப்பதால் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு நேரம் போதவில்லை  என்றார் அவர்.auto3

அதிகமான மாணவர்கள் பட்டதாரிகளாகும் பொருட்டு தரத்தைக் குறைக்குமாறு விரிவுரையாளர்கள்  கட்டாயப்படுத்தப்பட்டுள்ள பல சம்பவங்களும் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

‘எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமல்’ பல்கலைக்கழகங்களுக்கு நிதி வழங்கப்பட வேண்டும் என்றும் கூடுதல்  தகுதி வேண்டும் என்றும் ஸாஹாரோம் வலியுறுத்தினார். அத்துடன் கல்வியாளர்கள் ஒரு நிலையைக்  கடைப்பிடிப்பதும் முக்கியமாகும். அந்தக் கடப்பாடு இல்லாவிட்டால் எதனையும் மாற்ற முடியாது.

auto4மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான கருவிகள்

பேச்சாளர்கள் உரையாற்றிய பின்னர் ஆய்வரங்கு அனுசரணையாளர், கூட்டத்தில் இருந்த ஆஸ்திரேலிய சமூகவியலாளரான கிளைவ் கெஸ்லரை உரையாற்ற அழைத்தார்.

சிட்னியில் உள்ள நியூ சவூத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியரான அவர், மலேசியா  விவகாரங்களை நீண்ட காலமாக ஈடுபாடு கொண்டுள்ளார்..

விவாதத்தைத் தூண்டும் வகையில் பொது மக்களிடையே தங்கள் கருத்துக்களை பரப்புவதற்கு வழிகளைக் காணுமாறு அவர் கூட்டத்தினரைக் கேட்டுக் கொண்டார்.

மக்கள் அதிகமாக பேசுவதில்லை எனக் குறிப்பிட்ட கெஸ்லர் அதற்கு சொல்வதற்கு அதிகம் இல்லாததும் அப்படியே இருந்தாலும் அதனை எப்படிச் சொல்வது என்பதை அறியாதவர்களாகவும் இருக்கின்றனர் என்றார் அவர்.

“உங்களில் 20 அல்லது 30 பேர் பொது மக்களுக்கு அக்கறையுள்ள விஷயங்கள் பற்றி மாதம் ஒன்றுக்கு 600,  800 அல்லது 1,000 வார்த்தைகளை தெளிவாகவும் குறிப்பாகவும் எழுதுங்கள். அதனை மலேசியா இன்சைடர், மலேசியாகினி போன்றவற்றில் போடுங்கள்.”

“பொது மக்கள் பங்கு கொள்ளும் வகையில் பொதுப் பிரச்னைகள் மீது உங்களுக்கு இடையில் விவாதம்  செய்யுங்கள். இது போன்ற விஷயங்கள் மாற்றத்தைக் கொண்டு வரும். அவை உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.”