இன்னொரு ஊடுருவல்காரர் கொல்லப்பட்டார்; இது வரை 62 எதிரிகள் கொல்லப்பட்டனர்

troopsகம்போங் தஞ்சோங் பத்துவில் இன்று பாதுகாப்புப் படைகள் Ops Daulat நடவடிக்கையில் மேலும் ஒரு சுலு பயங்கரவாதி ஒருவரைச் சுட்டுக் கொன்றுள்ளன.

அவரையும் சேர்த்து மொத்தம் 62 எதிரிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினட்  ஜெனரல் சுல்கிப்லி காசிம் தெரிவித்தார்.

இன்று காலை மணி 9.55க்கும் 10.15க்கும் பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளுடன் இரண்டு முறை சண்டையிட்டதாக அவர் சொன்னார்.

“அதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டார். மூன்று பயங்கரவாதிகள் தப்பி விட்டனர்.”

அந்த விவரங்களை சபா போலீஸ் ஆணையாளர் ஹம்சா தாயிப் பெல்டா சஹாபாட் 16ல் அமைந்துள்ள Ops Daulat தலைமையகத்தில்  நிருபர்களிடம் தெரிவித்தார்.

தப்பித்த மூவரையும் பாதுகாப்புப் படைகள் தேடிக் கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.

கம்போங் தண்டுவோ-விலும் கம்போங் தஞ்சோங் லாபியானிலும் துடைத்தொழிப்பு நடவடிக்கைகள் தொடருவதாகவும் அந்தப் பகுதிகள் ‘வெள்ளைப் பிரதேசங்கள்’ என அறிவிக்கப்பட்டதும் அந்தக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மீண்டும் திரும்ப அனுமதிக்கப்படுவர் என்றும் ஹம்சா தெரிவித்தார்.

கம்போங் தஞ்சோங் பத்துவில் சிறிய கும்பலாக எதிரிகள் நடமாடுவதாக  நம்பப்படுகின்றது என்றும் அவர் சொன்னார்.

பயங்கரவாதிகள் யாரையும் கண்டால் உடனடியாக பாதுகாப்புப் படைகளுக்குத் தெரியப்படுத்துமாறும் அவர்  பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

பெர்னாமா